டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி – திராவிட மாயைக்கு அப்பால் ஒரு மாமனிதர் !

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி – திராவிட மாயைக்கு அப்பால் ஒரு மாமனிதர் !

Share it if you like it

இன்றய பாரதத்தில்

  1. பெரிய தலைவர்கள் என்று போற்றப்படவேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள்
  2. இவர்களைப் பற்றி மட்டும் தான் நிறைய பேசவேண்டும் என்ற ஒரு சிறு பட்டியல் உண்டு
  3. போற்றப்படக்கூடாத தலைவர்கள் என்று சிலர் கட்டம் கட்டப்பட்டுள்ளனர்
  4. இவர்களை குறிப்பிட்ட சிந்தனையை சார்ந்த அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் சீடராக மட்டும் தான் சித்தரிக்கவேண்டும் என்று சிலர் வரையறுக்கப்பட்டுள்ளனர்
    இதில் நான்காவது ரகம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

டாக்டர் ரெட்டியைப் பற்றி பேசும் பொழுது பிராமண துவேஷம் எட்டிப்பார்ப்பதை தடுக்கமுடியாது. அதே போல் ஏதோ ஒரு சிரியார் இல்லாவிட்டால் இவர் இல்லை என்ற ஒரு மாயாவாத திரை நம் பார்வையை மறைப்பதை நம்மால் தடுக்கமுடியாது. இந்தக்கட்டுரை மூலம் இரண்டு விஷயங்களை பார்ப்போம் – ஒன்று, யார் இந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி? இவரை நாம் ஏன் போற்றவேண்டும்? இரண்டு, இவருக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன தொடர்பு? திராவிட இயக்கத்தினர் கூறுவது போல் இவர் ஈவேரா கைகொடுத்துத் தான் முன்னேறினாரா?

ஜூலை 30, 1886 அன்று புதுக்கோட்டையில் ஸ்ரீ நாராயணசாமி ஐயர் மற்றும் ஸ்ரீமதி சந்திராம்மாள் அவர்களுக்கு மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. அப்பொழுது புதுக்கோட்டை மஹாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்தார் நாராயணசாமி ஐயர். வாழ்க்கையில் முன்னேறப் படிப்பே முதல் படி என்று உணர்ந்து, தன் நாலு குழந்தைகளுக்கும் ஒரு நல்ல கல்வி அஸ்திவாரம் அமைத்துத் தரவேண்டும் என்ற ஆசை இருந்தது அவருக்கு.

அந்தக்காலத்து வழக்கம் போல், முத்துலட்சுமி ஒரு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பாடத்தை துவங்கினாள். வெகு விரைவில், புதுக்கோட்டை ஆண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். முத்துலட்சுமியின் அறிவாற்றல் மற்றும் கிரகிக்கும் தன்மையை வியந்த ஆசிரியர்கள் அவளுக்கு ஆங்கிலம் சொல்லித்தர ஆரம்பிக்க, அவள் முதல் பார்ம் படிப்பை முடித்தாள். அவள், தான் முதல் பாரம் முடித்துவிட்டதாகச் சொல்லித்தான் ஐயருக்கே விஷயம் தெரிந்தது. அப்பொழுதான் முத்துலட்சுமி எப்படிப்பட்ட குழந்தை என்பதை உணர்ந்தார் நாராயணசாமி ஐயர். முத்துலட்சுமியின் தாயாருக்கு அவள் பள்ளி செல்வதில் உடன்பாடில்லை. இருமுறை படைப்பை நிறுத்திக்கூடப் பார்த்தார், ஆனாலும் முத்துலட்சுமி விடுவதாக இல்லை. 13 வயதுக்குப்பின் வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்டு, ஹோம் ஸ்கூலிங் என்ற வீட்டுக்கல்வி வழியில் பயின்றார். 1902 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார் முத்துலட்சுமி. அந்தப் பரீட்சை எழுதிய நூறு பேரில் வெறும் பத்துப் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர், அதிலொன்று முத்துலட்சுமி.

புதுக்கோட்டையில் பெண்கள் கல்லூரி இல்லாததால் திருச்சி அல்லது பாளையம்கோட்டை சென்று படிக்க விரும்பினார் முத்துலட்சுமி. வெளியூருக்கு மகளை அனுப்ப மனமில்லாத ஐயர் அவர்கள், புதுக்கோட்டை மகாராஜாவுக்கு தன் மகளை புதுக்கோட்டை ஆண்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க சிறப்பு அனுமதி வழங்குமாறு கோரிக்கைவைத்தார். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, முத்துலட்சுமி தன் பல்கலை புகுமுகப்படிப்பை (pre-university) புதுக்கோட்டை ஆண்கள் கல்லூரியில் தொடர்ந்தார். முத்துலட்சுமியின் வகுப்புத்தோழர் தீரர் சத்தியமூர்த்தி அவர்கள். ஒன்றாய்ப் படித்த சத்தியமூர்த்தி தான் முத்துலட்சுமி அவர்களை திராவிடப் பகடையாய் உருட்டஉபயோகிக்கப்படும் கை. இதுபற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

1907ல் மெட்ராஸ் வந்த முத்துலட்சுமி அவர்களுக்கு மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ உரிமப் படிப்பில் (Licenciate) இடம் தரப்பட்டது. ஆனால் முத்துலட்சுமி அவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (MB & CM) படிப்பதற்காகவே தான் அங்கு வந்துள்ளதாகவும் அது தவிர வேறு எதுவும் படிக்க அவருக்கு விருப்பமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். ஒரு வருடம் பார்ப்போம், தேர்வு முடிவுகளைப் பொறுத்து, உரிமைப்படிப்பா அல்லது பட்டப்படிப்பா என்று முடிவு செய்வோம் என்று கூறிய கல்லூரி நிர்வாகம், பட்டப்படிப்பு வகுப்பில் முத்துலட்சுமிக்கு தற்காலிக அனுமதி அளித்தது. முதல் நாளிலிருந்து மிளிர ஆரம்பித்தது முத்துலட்சுமி என்னும் நட்சத்திரம். அந்தக்காலத்தில், மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் கர்னல். கிப்பர்டு என்ற ஒரு பிரபலமான மகப்பேறு மருத்துவ பேராசிரியர் இருந்தார். அவர் ஒரு சிறந்த மருத்துவர் மற்றும் பேராசிரியர். அவர் தனது வகுப்பில் மாணவிகளை அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் அவர், தான் பாடம் சொல்லுவதை பெண்களால் கிரகிக்க முடியாது என்ற ஒரு தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் அந்த பாடங்களை அவரது துணை பேராசிரியர் பின்னர் மாணவிகளுக்குச் சொல்லித்தருவார். அந்த வருடம் நடந்த தேர்விலும், போட்டிகளிலும் முத்துலட்சுமி பல பதக்கங்களை வென்று குவித்தார். இதைக்கண்ட கர்னல். கிப்பர்டு, அன்று முதல் தன்னுடைய வகுப்பில் பெண்களை அனுமதிப்பதாக அறிவித்தார். பின்னாளில் பட்டப்படிப்பு இறுதியாண்டில், அறுவை சிகிச்சை பாடத்தில் நூற்றிற்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக MB & CM படிப்பில் தேர்வு பெற்றார்.

மெட்ராஸில் அன்று இருந்த பல சுதந்திரப்போராட்ட வீரர்களுடன், முத்துலெட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. மஹாகவி பாரதியின் அன்புக்கு பாத்திரமானார் அவர். முத்துலெட்சுமியை பாரதியார் தன் இந்தியா இதழுக்கு கட்டுரை எழுதுமாறு பணித்தார். அவரை தன் இல்லத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்தார். இது தவிர சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் என்று பல சுதந்திர போராட்ட வீரர்களுடன் நட்பாக பயணிக்க ஆரம்பித்தார்.

லண்டனில் மருத்துவ படிப்பை முடித்த டாக்டர் தி சுந்தர ரெட்டி, முத்துலெட்சுமியை மணமுடிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வந்து சேர்ந்தார். முடிவாக சுந்தர ரெட்டியை மணம் செய்துகொள்ள ஒரு நிபந்தனை விதித்தார், “அவர் என்னை சமமாக நினைப்பதோடு, எனது விருப்பங்களில் குறுக்கிடக் கூடாது.” என்பது தான் அது. நிச்சியதார்த்தம் முடிந்து ஒரு வருடம் கழித்து, ஏப்ரல் 1914ல் டாக்டர் தி சுந்தர ரெட்டி அவர்களை மணந்து முத்துலட்சுமி ரெட்டியாக ஆனார். அவர்கள் ராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி என்று இரு மகன்களைப் பெற்றெடுத்தனர்.

1925ல் இந்திய அரசு உதவித்தொகை பெற்று லண்டனில் மருத்துவ முதுகலை மேற்படிப்பு படிக்கச் சென்றார். கொடிய புற்றுநோய்க்கு தன் இளைய சகோதரி சுந்தராம்பாள் பலிகொடுத்து, சகோதரியின் நினைவால் வாடிய அவர், அக்கொடிய நோய்க்கு மருத்துவம் செய்வதே தன் தலையாய கடமை என்று முடிவுசெய்தார். அதனாலேயே, முதுகலையில் புற்றுநோய், மகப்பேறு மருத்துவம் மற்றும் சேய் நலம் பற்றி படித்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருந்தும் அவர் சட்ட மேலவையில் தாக்கல் செய்த தேவதாசி தடுப்புச் சட்டம் மட்டுமே திராவிடப் பேச்சாளர்களால் பெரிதாய் பரப்புரை செய்யப்படுகிறது. அதுவும் மேலவையில், டாக்டர் ரெட்டி அவர்களுக்கும் தீரர் சாத்தியமூர்த்திக்கும் இடையே நடந்தாய் புனையப்பட்ட கட்டுக்கதை விவாதம் ஒன்றை பற்றி நாம் பல வருடங்களாய் கேட்டு பழக்கப்பட்டுவிட்டோம். இந்தக் கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் நேர்த்தியாக இருப்பதால் நாம் அதற்கு ஆதாரம் ஏதும் உண்டா என்று கூட சிந்தித்திருக்க மாட்டோம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் எழுதிய புத்தகங்களிலும், பதிவுகளிலும், சட்ட மேலவைக் குறிப்பேட்டிலும் இந்த நிகழ்வு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

பொய் ஒன்று: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஈவேரா அவர்களின் சீடர். ஈவேரா கேட்டுக் கொண்டதன் பொருட்டே தேவதாசி தடுப்புச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

வரலாறு என்ன கூறுகிறது: இந்த சட்ட வரைவு 1926ல் மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் ஈவேரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் தான் அவர் ஒரு உலக சுற்றுப்பயணம் சென்றார். அதில் ஜெர்மானிய கடற்கரையில் ஒரு ‘முக்கியப் பகுதியில்’ அவர் எடுத்துக்கொண்ட படம் மிகவும் பிரசித்தம். அப்பொழுது அவருக்கு ஆட்சி அரசியலில் எந்த வீச்சும் இருந்ததாகத் தெரியவில்லை. ஈவேரா கொண்டதால் தான் இந்த சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

பொய் இரண்டு: இந்த சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்ட பொழுது மேலவையில் பல அமளிகள் நடந்தேறின. குறிப்பாக சத்தியமூர்த்தி மற்றும் பிற பிராமண உறுப்பினர்கள் இந்த சட்டவரைவை மிகக்கடுமையாக எதிர்த்தனர். ஒரு கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, “நீங்கள் அக்கா தங்கைகளுடன் பிறக்கவில்லையா? உங்கள் குடும்பங்களில் பெண்பிள்ளைகளே கிடையாதா? மனைவிகள் கிடையாதா? வேண்டுமென்றால் அவர்களை இந்தத் தொழிலுக்கு அனுப்புங்கள்.” என்று சூளுரைத்தார். அரங்கம் அதிர்ந்து போனது, இந்த ஒரு பதிலே இந்த சட்ட வரைவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது.

சத்தியமூர்த்தி தேவதாசி தடுப்புச் சட்டத்தை எதிர்த்தார் என்பது நிதர்சனம். ஆனால் சத்தியமூர்த்தி இந்த மனு மேலவையில் விவாதத்தில் இருந்த பல வருடங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே விவாதத்தில் பங்குகொண்டு பேசினார். அந்த விவாதம் அந்த சட்ட வரைவில் சில உறுப்பினர்கள் கொண்டுவர விழைந்த சில திருத்தங்களைப் பற்றியது. இதில் பங்குகொண்ட சத்தியமூர்த்தி, “நண்பரின் திருத்தங்கள் பலருடைய சொத்து மற்றும் தனி மனித உரிமைகளைப் பெருமளவு பாதிக்கும் என்பதால், என் கருத்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், இந்த அவை இத்திருத்தத்தை ஏற்பதை நான் எதிர்க்கிறேன்.” என்று பேசினார். இது தவிர சத்தியமூர்த்தி இந்த சட்டத்ததைப் பற்றி அவைக்குள்ளோ வெளியிலோ பேசியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சுயசரித்திரத்தில், சத்தியமூர்த்தியும் ராஜாஜியும் கேட்டுக்கொண்டதன் பெயரில் 1937ல் தான் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். ராஜாஜியைப் பற்றி சில இடங்களில் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் டாக்டர் ரெட்டி. ஆனால் சத்தியமூர்த்தியைப் பற்றி ஒரு சுடுசொல் கூட பார்க்க முடியாது. இந்தச் சட்டம் மேலவையில் நிறைவேற்றப்பட்டது 1947ல். பின்னர் இந்தச் சட்டம் சென்னை சட்டம் XXXI ஆகப் பிறப்பிக்கப்பட்டது. இது நடந்தபொழுது சத்தியமூர்த்தி இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தது.

நமக்கு மூன்று விஷயங்கள் மிகத் தெளிவாக தெரிகின்றன
• முதன் முதலில் தேவதாசி தடுப்புச் சட்டத்தை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மேலவையில் தாக்கல் செய்த பொழுது, சத்தியமூர்த்தி மேலவை உறுப்பினர் கிடையாது.
• இது பல வருடங்கள் சட்ட வரைவாகவே மேலவையில் இருந்த பொழுதும் ஒரே ஒரு முறை மட்டுமே சத்தியமூர்த்தி இது பற்றி பேசினார். அதுவும் சட்ட வரைவில் செய்யவேண்டிய திருத்தங்கள் பற்றிய விவாதத்தில் தான் அவர் குறுக்கிட்டார்.
• இந்த வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, சத்தியமூர்த்தி மறைந்து போய் நான்கு வருடங்கள் முடிந்திருந்தன.

ஆதரங்களைப் பார்க்கும் பொழுது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றும் ஈவேராவின் சிஷ்யர் கிடையாது. ஈவேரா சொல்லித்தான் தேவதாசி தடுப்புச் சட்டத்தை டாக்டர் ரெட்டி தாக்கல் செய்தார் என்பது ஒரு பச்சைப் பொய்.

மேலும் சபையில் என்றும் டாக்டர் ரெட்டியும், தீரர் சத்தியமூர்த்தியும் மோதிக்கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அது ஒரு திராவிட மேடையில் ஒருவரால் பேசப்பட்டு, அது ஒரு புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டு, பின் அந்த புத்தகத்தை ஆதாரமாகக் காட்டி ஒரு பொய் மெய்யாக ஆனது என்பது (உண்மை) வரலாறு.

முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நம் பாரத கலாச்சாரம், இதிஹாச புராணங்கள் பற்றி மிகுந்த பக்தி கொண்டிருந்தார் என்று கூறினால் அது மிகையாகாது. ஜூலை 1936ல் பாரிஸ் பன்னாட்டு மகளிர் மாநாட்டில் பேசும் பொழுது தான் பெண்களை சக்தி வடிவாக மதிக்கும், கடவுளரை அர்த்தநாரீஸ்வரர் என்று ஆண் பெண் சரிநிகர் சமானம் என்ற கருத்தை எடுத்துச் சொன்ன தேசத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறினார்.

தேவதாசி முறையைப்பற்றி பேசும் பொழுது, “அயல்நாட்டவர் இது ஹிந்து மதத்தால் அங்கீகரிக்கப் பட்ட ஒன்று என்று தவறாகக் கூறுகிறார்கள். பண்டைய மதக் கருத்துக்கள் படி இளம் பெண்களை கோவிலுக்கு அர்ப்பணித்து சேவைக்கே என்று கருதப்பட்டது. அதாவது, பல சமூகப் பிரிவுகளை சார்ந்த பெண்களும், கோவில்களுக்கு, மதத்துக்குச் சேவை செய்யவே அளிக்கப்பட்டனர்.”

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலும்பொழுது, பூந்தமல்லி சாலையில் உள்ள YWCA வில் தங்கியிருந்த நண்பர்கள் பற்றி பேசும் பொழுது. “அவர்கள் என்னை விடுமுறை நாட்களில் அவர்கள் அறைக்கு அழைப்பார்கள். அப்பொழுது கிறிஸ்துவத்தின் மகத்துவம் பற்றி பேசி என்னையும் மதம் மாறும் படி அழுத்தம் கொடுப்பார்கள். ஆனால் நான் உங்களை விட நல்ல நிலைமையிலேயே இருக்கிறேன் என்று கூறி கடந்து சென்றுவிடுவேன்.” என்று கூறுகிறார்.

சிக்காகோ பன்னாட்டு பெண்கள் மாநாட்டில் பேசும் பொழுது, “பால்யவிவாஹம், பர்தா அணியும் முறை ஆகியவை அந்நிய படையெடுப்பின் பொழுது எங்கள் பெண்களைக் காக்க நாங்கள் செய்துகொண்ட மாற்றங்கள்.” என்று பேசினார்.

திராவிட புளுகுகளை தோலுரிப்பது மிக அவசியம் என்றாலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் செய்த மற்ற பல அறிய விஷயங்கள் பற்றி பேசியாகவேண்டியது நம் கடமை. தேவதாசி தடுப்புச் சட்டம் தவிர டாக்டர் ரெட்டி அவர்கள் செய்த சிறப்பான செயல்களில் ஒரு சிலவற்றின் பட்டியல் இதோ.

  1. இந்திய சட்டசபைகளிலும், மெட்ராஸ் சட்ட மேலவையிலும் அமர்ந்து அலங்கரித்த முதல் பெண்மணி இவர்.
  2. மெட்ராஸ் சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
  3. மெட்ராஸ், அடையாறில் 1917 ல் துவங்கப்பட்ட இந்திய பெண்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்.
  4. மதுஒழிப்புப் பற்றி பேசிய குரல்களில் மிகவும் ஓங்கி ஒலித்த குரல் இவருடையது. இது பற்றி சட்ட மேலவையில் பேசும் பொழுது, “மதுஒழிப்பைப் பற்றி நம் நாட்டின் பெண்களின் கருத்துக்களை இங்கு ஒலிக்கும் பிரதிநிதியாய் அதுபற்றிப் பேச விழைகிறேன். மதுப்பழக்கம் நாட்டிற்கும், வீட்டிற்கும், மருத்துவரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் ஒரு மிகப்பெரிய கேடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.” என்று கூறினார்.
  5. 1928-29, பால்ய விவாஹத்தைத் தடுப்பதற்கும், பெண்களின் மண வயதை உயர்த்துவதற்கும் ஒரு சட்ட வரையறையை தாக்கல் செய்தார். இவர் எடுத்தது வைத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பலர் பெண்ணின் மண வயதை பதினெட்டாக உயர்த்தவேண்டும் என்று கூறினர்.
  6. சிலோன் மலையகத் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அங்குள்ள நிலைமையை நேரில் ஆராய ஒரு பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் அங்கிருந்த பிரச்சனைகளுக்கான தீர்வின் கோப்பை தேயிலை எஸ்டேட் முதலாளிகளுக்கு அளித்தார். இதனால் கோபம் அடைந்த அவர்கள், டாக்டர் ரெட்டியின் கூட்டங்களில் தகராறு செய்ய குண்டர்களை அனுப்பிவைத்தனர்.
  7. 1931ல் அநாதை மற்றும் அபலைப் பெண்களுக்காக அவ்வை இல்லம் திறக்கப்பட்டது. இன்று வரை அவ்வை இல்லத்தின் மூலமாக பல ஆசிரியர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கிராம சேவிகாக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
  8. இவரது முயற்சியால் 1930ல் சட்ட மேலவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து பிழைப்பு நடத்துவதை ஒழிக்கும் சட்டம் (Act for Suppression of Immoral Traffic in Women and Children) இயற்றப்பட்டது.
  9. மெட்ராஸில் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனை கோரிய வரைவை சட்ட மேலவையில் தாக்கல் செய்து அதை நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தார் இவர்.
  10. காந்திஜி அவர்களைக் கைது செய்ததை கண்டித்தது சட்ட மேலவையில் இருந்து மே 8, 1930 அன்று ராஜினாமா செய்தார்.
  11. கான்சர் நோய், கிழவர்கள் நோய் என்று கூறப்பட்டுவந்த காலத்தில் தன் 25 வயதே மிக்க அன்புத்தங்கையை அந்த கொடிய நோயால் இழந்தார். இதனால் மெட்ராஸில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையின் அவசியத்தை உணர்ந்திருந்தார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் (1935) இது பற்றிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். சில காரணங்களுக்காக புற்றுநோய் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கப்படாமல் போகவே, தானே இம்மருத்துவமனைக்கான ஆயத்தவேளைகளில் இறங்கினார். இவரின் கடும் முயற்சியின் காரணமாக 1952ல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மெட்ராஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றும் பாரத அளவில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கிவருகிறது, மெட்ராஸ் புற்றுநோய் மருத்துவமனை.
  12. 1937ல் மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் பெண் உறுப்பினராக பதவி ஏற்றார். தொழுநோய் மற்றும் நோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களுக்கான இல்லம் ஒன்று ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்றினார்.
  13. 1936ல் அவ்வை கிராமீய மருத்துவ சேவை மற்றும் இலவச மருத்துவமனை துவங்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவியைத் தான், தாங்கள் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதற்காக மிகச்சிறிய வட்டத்தில் அடைக்க பொய்களையும் புரட்டுகளையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது திராவிடம். இந்த திராவிட மாயையை அகற்றி உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அப்பொழுதுதான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற தலைவர்கள் நம் நாட்டிற்குச் செய்த தொண்டுகள் பற்றிய உண்மைச் செய்தி மக்களுக்கு முழுமையாக போய்ச்சேரும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மாவைப் போற்ற இதைவிட ஒரு சிறந்த குறள் உண்டோ!

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

  • திருக்குறள், அதிகாரம் 24, குறள் 236.

அம்மா அவர்கள் பிறந்த இந்த நன்னாளில் அவர் நினைவு போற்றுவோம்.

Notes and References
Autobiography of Dr. (Mrs) S. Muthulakshmi Reddy MB & CM, English, Avvai Homes Publication
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, அவ்வை இல்லம் – ராஜலக்ஷ்மி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை பதிப்பு (நவம்பர் 2017)
Dr (Mrs) S. Muthulakshmi Reddy, My Experience as a Legislator, English, Current Thought Press, Triplicane (1930)
மா வெங்கடேசன், தேவதாசி ஒழிப்புச் சட்டம், சுவாசம் பதிப்பகம் (ஏப்ரல் 2024)


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *