தமிழகத்தில் கொலை கொள்ளை போதைப்பொருள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. மேலும் போலீசாரின் வீட்டிலே கொள்ளை அடிப்பது, போலீசாரின் வீட்டிலே குண்டு வீசுவது என தொடர் குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் ஒருதலை காதலுக்காக போலீசாரின் வீட்டிலே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணேசனின் ஒரு மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலை வேந்தன் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்றிரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இதில் பெட்ரோல் குண்டு வெடித்து வாசலில் அமர்ந்திருந்த கணேசன் படுகாயம் அடைந்தார். அதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இதனை தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.