தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழகத்தின் மாநில இணை செயலாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்துள்ளதை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இதில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களில் விலை 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக 150 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வியில் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தமிழக அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்களுக்கும் இந்த கடுமையான விலை உயர்வு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் என்ற எண்ணம் தவறு. கல்வி மட்டும் இலவசமாக அளித்தால் போதாது புத்தகங்களும் அளிக்கப்படவேண்டும். எனவே பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாடநூல்களில் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ABVP தேசிய மாணவர் அமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.