மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பூபேஷ் என்பவர் பணி செய்து வருகிறார். இவர் பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி நல அலுவலர் வினோத்குமார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர் வராததால் புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு மாநகராட்சி நல அலுவலர் வினோத்குமார் சிகிச்சை அளித்தார்.
மருத்துவர் பூபேஷ் முன்னதாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ள நிலையில் அங்கு அவர் சரியாக பணிக்கு வரவில்லை என்று பொதுமக்கள் கூறிய குற்றச்சாட்டை முன்வைத்து அமைச்சர் சுப்பிரமணியன் அவரை பணியிடை மாற்றம் செய்தார். பணியிடை மாற்றம் செய்தும் மீண்டும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார். மக்களின் உயிரை காக்கும் உன்னதமான பணியிலிருந்து கொண்டு இதுபோல் செய்வது மருத்துவ பணிக்கே அவமானம், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.