தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களில் உள்ள காலி இடத்தை குரூப் 1 , குரூப் 2 , குரூப் 4 என தேர்வு வைத்து நிரப்பி வருகிறது.
2024 ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் உள்ள 507 காலிப்பணியிடங்கள், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2 ஏ பதவிகளில் உள்ள 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் வௌியிட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 14 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை 5,81,305 பேர் எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் குரூப் 2 வினாத்தாளில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார். காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது. A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது. B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது. C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி. D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை. E. விடை தெரியவில்லை. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கவர்னர் மீதான வெறுப்பை திமுக அரசு தேர்வு வினாத்தாளில் காட்டியுள்ளது தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசுக்கு என்னதான் தமிழக ஆளுநரோடு முரண்பாடு இருந்தாலும் அந்த பதவியையே கொச்சைப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டிருப்பது தமிழக அரசின் இழிவான எண்ணத்தை காட்டுவதாக உள்ளது.
இக்கேள்வியானது மாணவர்களிடையே ஆளுநர் பதவி மீதான மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநரின் பணிகள் குறித்த கேள்வி தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வில் கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.