திருப்பதி பிரசாதத்தின் புனிதம் கெடுத்தவர்களை தண்டிக்க வேண்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சூரைத் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
திருப்பதி லட்டு சம்பந்தமாக பக்தர்களிடம், இந்து சமுதாயத்திடம் இந்து முன்னணி வேண்டுகோள். புரட்டாசி 2–வது சனிக்கிழமை (28-9-2024) ஏகாதசி தினத்தில் திருப்பதி பிரசாதத்தின் புனிதம் கெடுத்தவர்களை தண்டிக்க வேண்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சூரைத் தேங்காய் உடைத்து முறையிடுவோம் வாருங்கள்.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை பக்தர்கள் உயிரினும் மேலான விஷயமாக கருதுகின்றனர். திருப்பதி செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் பிரசாதமாக வாங்கிய லட்டை பூஜை அறையில் வைத்து, பூஜித்து தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்வர்.
இத்தகைய புனிதமிகு பிரசாதமானது கோவில் மடைப்பள்ளி நடைமுறைகளின் படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட வேண்டிய நிலையில் கோடானு கோடி இந்துக்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக திருப்பதி கோவிலில் விலங்கு கொழுப்பு கலந்த லட்டு பிரசாதமாக வழங்கியிருப்பது அனைத்து இந்துக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரான கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஆய்வக பரிசோதனையில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கோயில்களிலும் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதங்கள் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் கோயில்களின் புனிதம் கேள்விக்குறியாகும் என்பதை இந்துக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்களாகிய நாம் புனிதமாக கருதும் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பற்றி கடவளிடமும் முறையிடுவோம்.
இந்துக்களாகிய நாம் புனிதமாக கருதும் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பற்றி கடவுளிடம் முறையிடும் போராட்டமானது வருகின்ற 28-ம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.
அதுசமயம் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களும் பொதுமக்களும் புரட்டாசி 2-வது சனிக்கிழமை (28.09.2024) ஏகாதசி தினத்தில் எங்கெல்லாம் ஆஞ்சநேய பகவான் திருக்கோவில்கள் உள்ளதோ, அங்கெல்லாம் ஒரு தேங்காய் எடுத்துக் கொண்டு, அங்குள்ள அனுமனையும் கருடனையும் மனதார வழிபட்டு இந்துக்களின் புனிதம் கெடுத்த, இந்த அநியாயத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதிகள் மீறல் மற்றும் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் அதிகாரிகள் இவர்களுக்கு ஆஞ்சநேய பெருமான் தண்டனை வழங்க வேண்டுமென மனதார வேண்டி தமிழக முழுவதும் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் திருக்கோவில்களிலும் சூரை தேங்காய் உடைத்து வேண்டுதல் வைப்போம்.
எனவே இறைவனிடம் முறையிடும், இப்போராட்டத்தில் ஏழுமலையானின் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள இந்துமுன்னணி அழைக்கிறது.