பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்ட வேண்டும் – வானதி சீனிவாசன் !

பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்ட வேண்டும் – வானதி சீனிவாசன் !

Share it if you like it

திமுகவின் உண்மை முகத்தை கூட்டணி கட்சிகள் உணரத் தொடங்கியுள்ளதாகவும்,பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்ட வேண்டும் எனவும் கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தெரிந்தோ, தெரியாமலோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவன், தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் குறிப்பாக திமுகவின் அரசியல் விசித்திரமானது. கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே அச்சம் கொள்ளும் திமுக, கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவே முடியாத திமுக, கூட்டணி கட்சிகள் தயவில் வெற்றி பெற்றதும், தனித்து ஆட்சி அமைக்கும். 1967ல் முதன்முதலில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் வரலாறு இதுதான்.

ஜனநாயகம், சமூக நீதி, சம உரிமை, சமத்துவம், கூட்டாட்சி, அதிகாரப் பகிர்வு, கூட்டணி தர்மம், கொள்கை கூட்டணி என வார்த்தைக்கு வார்த்தை திமுகவினர் பேசுவார்கள். எல்லாம் சொல்லில்தான். செயலில் எதுவும் இருக்காது.
சமூக நீதி பற்றி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அமைச்சரவை பட்டியலில் அவர்களுக்கு கடைசி இடம்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனுக்கு 33-வது இடம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜுக்கு 34-வது இடம். அதாவது கடைசி இடம். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. சி.வி.கணேசனுக்கு 30-வது இடம்.
இந்த மூவருக்கும் பிறகு அமைச்சர்களான முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம். திமுக பொருளாளர், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு 32-வது இடம். இதுதான் திமுகவின் சமூக நீதி. அதுபோல 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 2 பேர் மட்டுமே பெண்கள். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை ‘பெண்ணுரிமை’ பற்றி திமுகவினர் பேசுவார்கள்.

1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய 6 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்த 6 முறையும் வலுவான கூட்டணி அமைத்துதான் திமுக வென்றது. ஆனாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 96 தொகுதிகளில் மட்டுமே வென்றது. கூட்டணி கட்சிகளுக்கு 67 இடங்கள் கிடைத்தன.
பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களை திமுகவால் பெற முடியவில்லை. அதனால், கூட்டணி கட்சிகள் தயவில்தான் ஆட்சி அமைத்தது. கூட்டணி ஆட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்தும், அதை துளியும் மதிக்காமல் தனித்து ஆட்சி அமைத்தது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கூட தரவில்லை. இதுதான் திமுகவின் கூட்டாட்சி கொள்கை. கூட்டணி தர்மம்.
கூட்டணி இல்லாமல் இதுவரை தேர்தலை சந்திக்க கூட துணிவில்லாத திமுக, ஆட்சிக்கு வந்ததும் கூட்டணி கட்சிகளை துச்சமென மதிக்கிறது. கறிவேப்பிலையைப் போல தேர்தலின்போது பயன்படுத்திக் கொண்டு, தேர்தல் முடிந்து ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் தூக்கி வீசி விடுகிறது. திமுகவின் இந்த பாசிச முகத்தை கூட்டணி கட்சிகள் உணரத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம்.
2019, 2024 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் எந்த பங்கும் இல்லை. ஆனால், 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தும் கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடமளித்தார். பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டு ஆட்சி அமைத்த மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு அவர்களின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரப் பகிர்வு அளிக்க திமுகவுக்கு மனமில்லை.

இவற்றையெல்லாம் உணர்ந்துதான் ‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்ற புதிய கோஷத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர சகோதரர் திருமாவளவன் முன்வைத்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்த திரைப்பட நடிகர்கள் துணை முதல்வராக ஆசைப்படும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரத்திற்கு வரக் கூடாதா?” என நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவருக்கு பதிலளித்திருப்பவர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா. பெரம்பலூரைச் சேர்ந்த அவர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தனித் தொகுதியாக இருந்த வரை அங்கு போட்டியிட்டார். பெரம்பலூர் பொது தொகுதியானதும் அவரை நீலகிரி தனி தொகுதியில் போட்டியிடச் செய்து சமூக நீதியை கேலிக்கூத்தாக்கிய கட்சிதான் திமுக.
மகன் உதயநிதியை துணை முதல்வராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பது திமுக கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளும் அதிகாரப் பகிர்வை கோரியிருக்கிறது. இந்த நேரத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் மகனுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்குங்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த குறைந்த இரண்டு பேருக்கு தொழில், நிதி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, வருவாய், நிதி, உள்துறை, இந்து சமய அறநிலையத்துறை போன்ற முக்கியமான துறைகளை ஒதுக்குங்கள்.

மகனை துணை முதல்வராக்கிதான் தீர வேண்டும் என்றால், அவருடன் இரண்டாவதாக, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கி அவருக்கு உள்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஒதுக்குங்கள். பட்டியலினத்தவர்கள் அவர்கள் தேவையானதை, அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி. இனியாவது சமூக நீதி. சம உரிமை, சமத்துவம் என பேசிக் கொண்டிருக்காமல் செயலில் காட்டுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *