மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் உடனான பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழக பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான பல்வேறு கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, தமிழக பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
அந்தக் குழுவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் அனுமதியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், ஒருங்கிணைத்தடவும் மாநில அளவில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் மார்ச் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், பாஜகவின் இந்த குழு அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.