மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின்” சார்பில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்ற மாநாடு நடத்தப்பட்டது.
இதில் கலந்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், ‘இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு’ என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்” என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியின் பேச்சு, நாடு முழுவதும் பேசு பொருளாகவும் விவாதமாகவும் மாறியது.
சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிராக கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் தான், உதயநிதி நேரில் ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மார்ச் 4ஆம் தேதி ஆஜராகுமாறு உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரமேஷ் என்ற நபர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு நடந்த 5 மாநில தேர்தலிலும் சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்து தொடர்பாக பல மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.களை இணைக்க கோரிய வழக்கில், “நீங்கள் ஒரு சாமானியர் இல்லை, ஒரு அமைச்சர் ; விளைவுகளை தெரிந்து கொள்ள வேண்டாமா ?” இவ்வாறு அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இம்மனு மீதான விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.