தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் அருகே சண்முகசுந்தரபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் 1988ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது பல பணிகளில் வெற்றிகரமாக கால் ஊன்றி இருக்கின்றனர். படித்து முடித்து 35 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் அனைவரும் சந்திதுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து வாட்ஸ் அப் க்ரூப் தொடங்கி அதன் மூலம் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர்களது பேச்சு வார்த்தை 3 ஆண்டுகளுக்கு நடந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து, அவர்கள் படித்த அதே பள்ளியில் குழந்தைகளாக சந்தித்து கல்வி பயின்ற மாணவர்கள், தற்போது தங்களது பேரன், பேத்திகளுடன் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அறியாத வயதில் எப்படி பேசி மகிழ்ந்தனரோ, அதே போல மனைவி குழந்தைகளுடன் வந்து சந்தித்து பேசி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பேசிய முன்னாள் மாணவி ஜோதி, பல நாள் கனவு நிறைவேறியதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். 96 படத்தைப் பார்த்திருப்போம், ஆனால் 88ல் படித்த மாணவர்களின் இந்த சந்திப்பு பார்ப்பதற்கே அழகாக இருந்ததாக அப்பகுதியினர் கூறினர்.