ஒரு கட்டத்தில் வங்கதேசத்தில் வன்முறை உச்சத்திற்கு சென்றது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இந்து சமூகத்தினருக்கு எதிரான வன்முறையாக மாறியுள்ளது. ஏராளமான இந்துக் கோவில்கள், வீடுகள் மற்றும் இந்து சமூகத்திற்கு சொந்தமான இடங்கள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இதுவரை எண்ணற்ற இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் இந்துக்கள் மீதான வெறுப்புக்கான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்நாட்டு தொலைக்காட்சி நிலையம், சிறைச்சாலைகள் சூறையாடப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போன நிலையில் ராணுவம் களமிறக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில், சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள், கடைகள், மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள ஹிந்துக்களை பாதுகாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தனர்.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இடைக்கால பிரதமராக இருக்கும் முகம்மது யூனுஸ் பிரதமர் மோடியை அலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். அதில் வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும், ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்காளதேசமாக மீண்டும் மாற இந்தியாவின் ஆதரவை மீண்டும் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாப்பதாக பிரதமர் மோடியிடம் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.