தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் திமுகவைச் சேர்ந்த நிபந்தன். இவர், தூய்மைப் பணியாளர்களை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் பேசிய காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது.
முன்னதாக, தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதியில், அப்பகுதியில் சாலைப் பணிகள் மேற்கொள்வதற்காகக் கூறி, குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக் கோரி தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக உள்ள நிபந்தன், “போய் கலெக்டர பாரு, ஸ்டாலினை பாரு, யார வேணாலும் பாரு, நோட்டீஸ் கொடுத்து எல்லாத்தையும் வெளியேற்றுவேன், உங்களுக்கு அவ்வளவு திமிர் இருந்தால் என் திமிரை நான் காட்டுவேன், கோட்டர்ஸ்ல தூய்மைப் பணியாளர்களை தவிர்த்து குடியிருக்கும் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவேன். நீ சட்டம் பேசினால் நானும் சட்டம் பேசுவேன், கோட்டர்ஸ்ல குடியிருந்திருவியா, போராட்டம் பண்ணி ஒன்னும் நடக்காது” என ஒருமையில் பேசி, அவர்களை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதனை அடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அறிவழகன் என்ற தூய்மைப் பணியாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் புகார் அளித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தூய்மைப் பணியாளர்களை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் பேசிய தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் மீது தேவதானப்பட்டி காவல்துறையினர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.