ஒற்றுமை இல்லா குடும்பம் ஒருமிக்க கெடும் – சுவாமி சித்பவானந்தர் !

ஒற்றுமை இல்லா குடும்பம் ஒருமிக்க கெடும் – சுவாமி சித்பவானந்தர் !

Share it if you like it

அருளும் பொருளும் பெற்று இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்ற வாழ்வு வாழ்ந்த பெரியண்ணன்,நஞ்சம்மையார் தம்பதியின் ஏழாவது மகனாக 1898ல் பிறந்தார். இவர் பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி கற்றபின் ஸ்டேன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்தர கல்வி கற்றார். சிறுவயது முதற்கொண்டு ஒழுக்கம், தூய்மை ,சுறுசுறுப்பு, தீரம், விவேகம் , நுணுக்கமான ஆராய்ச்சி, மேற்கொள்ளும் பணியில் தீவிரமான ஈடுபாடு, செய்வன திருந்த செய்யும் போக்கு , காலத்தை பேணுதலாகிய இயல்புகள் உடையவராயிருந்தார்.
‘ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தார் செயின் ‘— காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொண்டு செயலாற்றினால் உலகையே வென்று விடலாம். காலம் தவறாமை என்னும் சீரிய பண்பை இவர் வாழ்க்கை செயல்கள் யாவும் விளக்கி காட்டின.
பள்ளியில் கடினமான தேர்வாகிய சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆங்கில கல்வி முறையில் கற்றார் எனினும் பாரத பண்பிலேயே அவர் மனம் ஊறியிருந்தது அவர் உயர்கல்வி படிக்கும் பொழுது பல மகான்களின் தொடர்பு பெற்று மஹான்களின் அன்புக்கும் ஆசிக்கும் உரியவராக இருந்தார்.
அக்காலத்தில் வெளிநாடு சென்று பட்டம் பெறுவது பெருமையாக எண்ணினார்கள். அவரின் பெற்றோர்கள் மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்தனர் . அதற்காக அவர் கடற் பயணசீட்டு மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்க்காக சென்னைக்குச் சென்றார்.

அங்கு ஒரு அச்சகத்தில் தனது விசிட்டிங் கார்டு அடித்து தருமாறு கூறிவிட்டு வெளியே வந்தவர் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தவரை பார்த்தார். ‘சுவாமி விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்’ என்ற புத்தம்
அவர் கண்ணில் பட்டது . அதை வாங்கி படித்தார் . நாட்டின் அவல நிலை உணர்ந்து ,நாட்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. அவர் வெளிநாடு செல்லும் எண்ணத்தை கைவிட்டார் . சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதம், விஞ்ஞானம், தத்துவத்தை முக்கிய பாடமாக எடுத்துக் கொண்டார்.

சிறுவயதிலேயே இவர் உள்ளம் பொது தொண்டில் நாட்டம் கொண்டிருந்தது ஆடம்பர வாழ்விலும் சுகபோக வாழ்வில் ஈடுபட்டிருந்த சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் வாழ்ந்து வந்த போதிலும் இவருடைய உள்ளம் தூய வாழ்விலும், தியாக வாழ்விலும் ஈடுபாடு உடையதாக இருந்தது .
தற்கால கல்வி முறை ஏற்கனவே உள்ளத்தில் உள்ள நல்லுணர்வை தெய்வீக உணர்வை தலையெடுக்கா வண்ணம் தடுத்து வைக்கிறது சூழ்நிலை வசப்படாது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறி எது என்பதை அறியும் விவேகம் இவரிடம் இருந்தது .

இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள் – சித்பவானந்தர் கூறும் வழி:
குழந்தைகளுக்கு கெட்ட பழக்கம் எதுவும் வந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரியான பயிற்சி கொடுப்பதற்கு நம்மில் பலருக்கு தெரியாது. ஐரோப்பியர்களை போல நடந்து கொள்வதும், ஆடம்பர செலவில் பணத்தை வாரி இறைப்பதும் மேன்மை என்று கருதுவது தவறான எண்ணம் ஆகும். ஒற்றுமை, அன்பு, உயர் பண்பு ஆகியவையே சிறந்த இந்து குடும்பத்திற்கு உரிய லக்ஷணம் . சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை என்பது உண்மை.

குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது ஆண்டுதோறும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி திட்டம் போடவேண்டும். வரவு செலவுகளை ஒழுங்குபடுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாம் மேற்கொண்டுள்ள பணியை நாணயமாக செய்து முடிக்க வேண்டும். இப்படி திட்டமிட்டு செயல்பட்டால் வருடமுடிவில் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆண்டுதோறும் குடும்பத்தினர் அனைவரும் சில ஆலயங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒன்று போல் நேசிக்க வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நூல்கள் இராமாயணமும் மகாபாரதமும் ஆகும். பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு நேசிக்க வேண்டும், பிள்ளைகள் பெற்றோர்களை எவ்வாறு போற்றி மதிக்க வேண்டும், சகோதரர்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும், மனைவி கணவனிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் இராமாயணம் நமக்கு புகட்டுகின்றது. “ஒற்றுமை இல்லா குடும்பம் ஒருமிக்க கெடும்” என்பது முதுமொழி எனவே ஒற்றுமையே சௌபாக்கியமாக வாழ வழிவகுக்கும்.
‘செல்வம் இன்று வரும் நாளை அது நம்மை விட்டுப் போய்விடும்’ ஆனால் உயர் பண்பாடு என்பது என்றும் அழியாத செல்வமாகும்’சிலர் பணக்காரர்களாக இருக்கின்றனர் ஆனால் முரடர்களாகவும் நாணயமற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் எனில் அவர்களிடம் செல்வம் சேர்ந்து என்ன பயன்? நல்லவர்களை காப்பாற்றுவதற்காக நாம் கடுமையாக நடந்து கொள்ளலாம் ஆனால் கடுமையாக இருப்பதே வாழ்வாக வடிவெடுத்து விடக்கூடாது. ஓருவரை அளவுக்கு மேல் புகழுவது கூடாது .சிலர் அவற்றை பிறவி குணமாக பெற்றிருக்கின்றனர். அபிப்பிராயங்களை பற்றி நீங்கள் கவலைப்பட கூடாது, நாம் செய்வது சரியா என்பதை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். நான் செய்கின்ற செயலை கடவுள் ஏற்பாரா என்பதை மட்டும் ஆராய்ந்தால் போதும்.
நாணயமான முறையில் பொருள் சம்பாதிக்க வேண்டும் இல்லையேல் அது விரைவில் அழிந்து போகும் சம்பாதித்த பொருளை நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது உண்மைதான். தேடிய பொருளை மற்றவர்களுக்கு பயன்படும்படியாக செலவு செய்வது நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்
சிந்தனை ,சொல், செயல் மூன்றிலும் சிறந்திருப்பவர்களை நாம் மதித்து பாராட்ட வேண்டும் அதனால் நமக்கு தாழ்வு ஒன்றும் வந்து விடாது.

சிலர் உயர்ந்த பதவியில் இருக்கலாம் ஆனால் குணத்தில் கீழானவர்களாக இருப்பார். பிறர் தங்கள் முன்னிலையில் இல்லாத பொழுது அவர்களை பற்றி பழித்து பேசுவார்கள். சிலர் பிறருக்கு உதவி தேவைப்படும் பொழுது அதை செய்ய மாட்டார்கள். ஒருவன் வீழ்ச்சி அடைவதை கண்டு மகிழ்ச்சி அடைவோர்களிடம் காரிய புலிகளாகத்தான் பழக வேண்டும் . நல்லவரிடம் நாம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.கெட்டவர்களை நம்ப கூடாது.அவர்களிடமிருந்து புன் சிரிப்புடன் விலகி விடவேண்டும். உடனே அவர்களை மறந்து விடவும் வேண்டும் .நம் குடும்பம் அழிய வேண்டும் என்று சிலர் ஆவலோடு எதிர்பார்க்கலாம் அத்தகையவர்களுக்கு நாம் எந்த தீங்கும் செய்யக்கூடாது பழி தீர்க்க நமக்கு நேரம் ஏது? எண்ணத்திலும் செயலிலும் தூயவர்களாக இருந்தால் கடவுள் நம்மை காப்பாற்றுவது உறுதி. நாம் நாணயமாக வாழ்ந்தால் ஆயிரம் பேர் முயன்றாலும் நம்மை அழித்து விட முடியாது

அனுபவம் ஒரு மனிதனை பண்பாளன் ஆக்குகின்றது. முள் உள்ள காட்டில் நடக்காதே என்ற ஒருவனுக்கு உலகம் முழுதும் சேர்ந்து சொன்னாலும் அவன் அதைக் கேட்க மாட்டான். ஆனால், அவன் அங்கு நடந்து சென்று காலில் முட்கள் தைத்து வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் பிறகு அந்த காட்டின் வழியே அவன் செல்ல மாட்டான். நீங்கள் அடையும் துன்பங்களுக்கு நீங்கள் தான் காரணம் என்பதை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல அனுபவங்கள் உங்களுக்கு பாடம் புகட்டி இருக்கும் எனவே எப்பொழுதும் காரண காரியங்களை நன்கு அறிந்து எச்சரிக்கையுடன் செயல் புரிய வேண்டும்.

இன்றைய காலத்திற்கு தேவையான கல்விமுறைமாற்றம் – சித்பவானந்தர் காட்டிய வழி

தற்கால கல்வித் திட்டம் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை .உடலைக் கொண்டு உழைக்க அவர்கள் மறுக்கின்றனர் .பிறருக்கு பணிவிடை செய்ய அவர்கள் முன்வருவதில்லை. மேலும் அவர்கள் தங்கள் சுவாதீனத்தில் இல்லை என்றைக்கும் அவர்கள் பிறருக்கு அடிமைப்பட்டவர்கள் ஆகிவிடுகிறார்கள் .பொருளையும், ஆயுள் காலத்தையும் விரயம் பண்ணுவதை விட பெரிய நஷ்டம் மற்றொன்று உண்டு .மனம் கெடுவதற்கு நிகரான கேடு வேறொன்றுமில்லை. மனதில் உள்ள ஆசையை நீக்குதல் கல்வியின் முதற்கடமை . மாறாக, மனதில் அதிகமான அழுக்கை நவீன கல்வி உண்டுபண்ணுகின்றது. தூய மணமுடையவன் தனது வாழ்வு உலகுக்கு நன்கு பயன்பட வேண்டும் என்று எண்ணுகிறான். தனது சுகஜீவனத்திற்கு உலகம் வேண்டியவாறு வசதி அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இப்படி சுயநல பற்று ஓங்குவது கீழ் மக்களது பாங்காகும்.
அதிகமான சம்பளம், குறைந்த உழைப்பு பொறுப்பில்லாத வேலையே இன்றைய குறிக்கோள் ஆகும். முதியோர்க்கும் , மேலோருக்கும் மரியாதை காட்டும் தன்மை கற்றவர்கள் மனதில் இன்று மறைந்து போய்க் கொண்டிருக்கிறது. குரு பக்தி அறவே அகன்று விட்டது. அடக்கமின்மை, ஆணவம், வணங்காமை, சோம்பல், உழைப்பின்மை பொறுப்பின்மை, பொது நன்மையை கருத்தில் வாங்கிக் கொள்ளாமல், சமுதாய உணர்ச்சியின்மை, கட்டுப்பாடான வாழ்க்கை வாழாமல் கேடுகளில் உழன்று கிடப்பவர்க்கு ஏட்டுக்கல்வியா னது மேலும் அதிகமான கேட்டை உண்டு பண்ணும். கேடுகள் நீங்குவதற்கு குருகுல கல்வி முறையில் உள்ள கல்வியே சிறந்த மருந்தாகும்.

குருகுலகல்வியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களும் நல்லதோர் இணக்கம் உள்ளது நல்லிணக்கம் ஒன்றே மனிதனை மேலோனாக்கும். மாணாக்கர்கள் பண்படுவதற்கு குருககல்வியே மிகவும் அனுகூலமான சூழ்நிலையாகும். குருகுல முறை கல்வியில் முறையான வாழ்க்கை பயிற்சி கொடுக்க இயலும்.

வாழ்க்கை வேறு கல்வி வேறு என்னும் செயற்கையான பிளவு என்றைக்கு இந்நாட்டினுள் புகுந்ததோ அன்றைக்கே சீர்கேடும் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. வாழ்வு உயிர் போன்றது கல்வி உடல் போன்றது உயிரையும் உடலையும் பிரித்து வைத்தால் மனிதன் பிணமாய் விடுவான். இப்பொழுது நமக்கு தென்படும் இளைஞர்கள் செத்த பிணங்கள் அல்ல, நடமாடும் பிணங்கள் . உயர்ந்த காரியம் எதற்கும் அவர்கள் உதவ மாட்டார்கள். மக்கள் கீழ்மையுற்று விட்டால் பிறகு எஞ்சி இருப்பது ஒன்றுமில்லை. இதிலிருந்து நமது சமுதாயத்தை மீட்டெடுப்பது குருகுல கல்வி முறையாகும்.
குருகுலகல்வியில் உண்பது, உறங்குவது ,நீராடுவது, நடப்பது விளையாடுவது, பணிவிடை செய்வது, பேசுவது, கடவுள் வழிபாடு செய்வது, அறிவு வளர்ச்சிக்கு ஏதுவான யோகா சாதனம் செய்வது பிணியாணிகளை பேணுவது, சமுதாய சேவை செய்வது,உணவு சமைப்பது, பரிமாறுவது ஆகிய இத்தனை விதமான பயிற்சிகள் நித்திய வாழ்வில் மாணாக்கர்களுக்கு ஆசிரியர்களோடு கலந்து அல்லும் பகலும் நடைபெற்று வரும். ஆசிரியர்கள் எத்தனை விதமான பயிற்சிகளிலும் வல்லுனராக இருப்பார்கள். வாழ்க்கைக்கு மக்களை ஆயத்தப்படுத்துவதே குருகுல படைப்பின் நோக்கம்.மாணாக்கனை மேலான மனிதனாக்கிவிடலாம்.
குருகுல கல்வியில் உள்ள வாழ்க்கை பயிற்சி மாணவனை அவன் முயற்சியால் மாற்றிக் கொள்ளும் ஆற்றலை கொடுக்கின்றது இதனால் இந்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நன்கு பயன்படுவான் .

தற்கால கல்வித் திட்டம் ஒழுக்கத்தை பேணுவதில்லை ஒருவன் எந்த நூலை எப்படி கருக்கிறான் என்பதை மதிப்பிடுகிறது நவீன கல்வி ஆனது தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் வேலையை செய்கிறது அதிலும் அறிவு வளர்ச்சி பின் தள்ளப்பட்டு நினைவாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தேர்வு பற்றி எண்ணமே மாணாக்கர் மனதில் உள்ளது தேர்வுக்காக படிப்பது என்ற நிலைமாறி, அறிவு வளர்ச்சிக்க்காக கல்வி என்னும் நிலை வரவேண்டும். இதற்கான சூழ்நிலை மற்றும் காலம் குருகுல கல்வியில் தேவையான அளவு கிடைக்கின்றது,

மக்களை உருவாக்கும் பணியே சிறந்த பணியென்றும் அதற்கான திட்டத்தை வகுத்து, அந்த வழியில் வாழ்ந்து காட்டியதே சித்பவானந்தருடைய செயலாகும்.
பச்சக் களிமண்ணாலான பாண்டத்தைக் கலைத்துவிட்டு நாம் விரும்பிய பாத்திரமாக மாற்றியமைக்கலாம். களிமண்ணிற்கொரு வடிவம் கொடுத்து அதனை சூளையிலிட்டுவிட்டால் அதை களைத்து வேறு வடிவம் செய்யமுடியாது. அதைப்போல சிறுவர்களுக்கு தக்க பயிற்சி கொடுப்பதன் மூலம,சமுதாயத்தை திருத்தியமைக்கலாம். எனவே கல்வித்துறையில் மனிதனை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுவர் சித்பவானந்தர்.
இளைஞர்களுக்கு தியாக உணர்வும் தேசபக்தியும் தேசப்பற்றும் தூய்மையும் வளர பண்டைய குருகுல அடிப்படையில் நவீனக்கல்வி முறையை தழுவி குருகுலம் அமைக்க வேண்டும். அதில் உருவாக்கப்படும் இளைஞர்கள் பிற்காலத்தில் வீரமும் தீரமும் உடையவர்களாய் நேர்மையே வடிவெடுத்தவர்களாய் பாரதத்தின் வறுமையையும் அறியாமையையும் போக்கி எழுச்சிமிக்க பாரதத்தை உருவாக்க பாடுபடுவார்கள்.
முதியோர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபடுவதற்கு வசதி செய்து அவர்களுக்கு ஏற்ற புனித சூழ்நிலை அமைத்து தர வேண்டும்.
இளம் துறவிகள் பலரை உருவாக்க வேண்டும். இங்கனம் அவர் திட்டமிட்டார் இத்திட்டத்தை செயல்படுத்த தபோவனத்தை நிறுவி பணியை தொடங்கினார்.

திருமதி.ராஜேஸ்வரி


Share it if you like it