“நாட்டில் அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை உறை விந்து உற்பத்தி வாயிலாக மீட்டு எடுக்கலாம், என, மத்திய பால்வள வாரியத்தின் அல மாதி உறை விந்து உற்பத்தி நிலைய பொது மேலாளர் குணசேகரன் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில், மத்திய அரசின் உறைவிந்து உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு அழிந்து வரும் கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான முயற்சிகள் மற்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து, அலமாதி உறை விந்து உற்பத்தி நிலைய பொது மேலாளர் குணசேகரன், தெற்கு மண்டல தலைவர் ஹரிசங்கர் கூறியதாவது:
தென்மாநிலங்களில், காங்கேயம், புங்கனூர், ஓங்கோல், வெச்சூர் உள்ளிட்ட, நாட்டு மாட்டு இனங்கள் உள்ளன. இவை பரவலாக அழிந்து வருகின்றன.அழிந்து வரும் நாட்டு மாடு இனங்கள் உறை விந்து முறையில் மீட்க முயற்சி புங்கனூர், வெச்சூர் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. முக்கியமாக பராமரிக்கப்பட வேண்டிய மாட்டு இனங்களின் பட்டியலில், வெச்சூர் மாட்டு இனங்கள், 2000ம் ஆண்டு சேர்க் கப்பட்டன. இன்றைக்கு 200 மாடுகள் வரை மட்டுமே உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், 95.61 லட்சம் உறை விந்து ஊசிகளை உற்பத்தி செய்து, நாடு முழுதும் அனுப்பினோம். நடப்பாண்டு, ஒரு கோடி உறைவிந்து ஊசிகளை நெருங்கியுள்ளோம். விவசாயிகள், அதிகம் பால் கறக்கும் நாட்டு மாடு இனங்களை விரும்புகின்றனர். எனவே, சந்தையில் நாட்டு மாடு இனங்களின் சினை ஊசிகள் தேவை அதிகரித்துள்ளது. கள்ளச்சந்தையில் போலியான சினை ஊசி களும் விற்கப்படுகின்றன. அலமாதி உறை விந்து நிலையத்தில் வழங்கப்படும் ஊசிகளில் தரத்தை உறுதி செய்வதற்காக, ரகசிய குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. இதனால், போலி ஊசிகளை தவிர்க்க முடியும்.
அலமாதி உறை விந்து உற்பத்தி நிலையத்தில், 25 வகையான மாட்டு இனங்கள் பராமரிக்கப்பட்டு வரு கின்றன. அடுத்த ஆண்டு, திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 500 நாட்டு மாட்டு இனங்களின் உறை விந்து ஊசிகளை வழங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.