ஒரு அரசியின் ஆயுதப் புரட்சி – வீர திருமகள் ஜான்சி ராணி லட்சுமி பாய்

ஒரு அரசியின் ஆயுதப் புரட்சி – வீர திருமகள் ஜான்சி ராணி லட்சுமி பாய்

Share it if you like it

ஒரு அரசியின் ஆயுதப் புரட்சி

சுதந்திரத்திற்கு பின்னர் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறினாலும் நம் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் மூலம் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதம் போன்ற அறிவிலும், ஆற்றலிலும் தன்னிகரற்ற ஒரு தேசத்தை பழமைவாத தேசமாக சித்தரிப்பதில் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. பழமைவாதத்தின் அங்கமான பெண்ணடிமைத் தனத்தை நம் நாட்டின் அடையாளமாக, தங்களின் திரிந்த ஆய்வுகள் மூலம் இவர்கள் திசையெங்கும் பிரச்சாரம் செய்தனர். நமது தேச சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட எத்தனையோ பெண்களின் வீர வரலாற்றை மறைத்த இவர்களின் சூழ்ச்சியெனும் கருமேகம் மறைக்க முடியாத சூரியன் தான் வீர மங்கை ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாய்.

பாரதம் ஆங்கில அரசிடம் அடிமையாக இருந்த காலம். 1828 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் நாள், தற்போதய வாரணாசியில் வாழ்ந்து வந்த மராட்டிய குடும்பத்தில், மோரோபந் தாம்பே பாகிரதி பாய் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. வாரணாசியில் குடிகொண்டுள்ள மணிகர்ணிகா தேவியின் பெயரையே தம் மகளுக்கு சூட்டிய பெற்றோர்கள் செல்லமாக ‘மன்னு’ என்றும் அழைத்து மகிழ்ந்தனர். மோரோபந் தாம்பே தற்போதைய கான்பூர் மாவட்டத்தின் அருகேயுள்ள பித்தூர் நகரத்தை ஆண்டு வந்த பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் அமைச்சராகவும் தளபதியாகவும் பணியாற்றினார். தனது நான்கு வயதில் தாயை இழந்த மன்னு பேஷ்வா பாஜி ராவின் அன்பிலும் ஆதரவிலும் வளர்ந்து வந்தார்.

வீட்டிலேயே கல்வி கற்ற மன்னு தனது சிறுவயது முதலே மற்ற பெண்கள் போல் இல்லாமல் வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார். மேலும் பாஜி ராவின் வளர்ப்பு மகனான நானா சாஹிப், அவரின் பயிற்சியாளரான தாத்தியா தோபே மற்றும் ராவ் சாஹிப் ஆகியோரை தனது நண்பர்களாகப் பெற்ற மன்னு வாள் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் மற்றும் மல்லர் கம்பம் போன்ற வீர சாகசங்களில் தேர்ச்சி பெற்றார். இது தவிர பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் போன்ற கலைகளையும் கற்றார். பெண்ணாகப் பிறந்தாலும் வீரமிக்க ஆண்களுக்கு நிகராக தன்னை தானே மன்னு செதுக்கிக் கொண்டார்.

தனது 14வது வயதில் மே மாதம் 1842ம் ஆண்டு நெவல்கர் வம்சத்தை சார்ந்த ஜான்சியின் மாமன்னர் கங்காதர ராவை மன்னு மணந்தார். அக்கால வழக்கப்படி மணமான பெண்ணிற்கு புகுந்த வீட்டில் லக்ஷ்மி என பெயர் சூட்டப்பெற்று ‘லக்ஷ்மி பாய்’ என எல்லோராலும் அழைக்கப் பட்டார். தனது 23வது வயதில் செப்டம்பர் மாதம் 1851ம் ஆண்டு ஒரு ஆன் மகவை லக்ஷ்மி பாய் பெற்றெடுத்தார். தாமோதர் ராவ் என பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை பிறந்த குழந்தை 4 மாதத்திலேயே நோய்க்கு இரையாகி இறைவனுடன் கலந்தது. மகனை இழந்த மன்னரும் நோய்வாய்ப்பட்டார். மரணப் படுக்கையில் இருந்த மன்னர் தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, நவம்பர் மாதம் 1853ம் ஆண்டு, தனது உறவினர் மகனான ஆனந்த ராவை தனது மகனாகவும் வாரிசாகவும் சட்டப்படி தத்தெடுத்து, தாமோதர் ராவ் என பெயரிட்டு, ஆங்கில அதிகாரிகள் முன் பதிவு செய்து, கையப்பம் இட்ட கடிதத்தையும் அளித்தார். பின்னர் மன்னர் கங்காதர ராவ் இறைவனடி சேர்ந்தார்.

இந்நிலையில் டல்ஹவுசி பிரபுவால் (Lord Dalhousie) அறிமுகம் செய்யப்பட்ட காலாவதி சட்டம் (Doctrine of Lapse) மூலம் வாரிசற்ற பல மாகாணங்கள் ஆங்கில அரசின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தான் இறப்பதற்கு முன்பு மன்னர் கங்காதர ராவ் செய்த சட்டபூர்வமான நடவடிக்கைகளை அங்கீகரிக்க ஆங்கில அரசு மறுத்தது. சதாரா, ஜெய்ப்பூர், சம்பல்பூர், பகத், உதய்பூர் போன்ற மாகாணங்களை தொடர்ந்து ஜான்சியும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. ‘நான் ஜான்சியை விட்டுத்தர மாட்டேன்’ என முழங்கிய லக்ஷ்மி பாய் ஆங்கில அரசால் தான் வசித்த அரண்மனை மற்றும் கோட்டையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மே மாதம் 10 தேதி 1857 மீரட்டில் துவங்கிய ஆயுத புரட்சி கான்பூர், லக்னோ போன்ற இடங்களை தொடர்ந்து ஜான்சியை ஆட்கொண்டது. இதுவரை நேரடி மோதலை தவிர்த்த லக்ஷ்மி பாய் தானே முன்னின்று படைத்தலைமை ஏற்று ஆங்கில அரசை எதிர்த்தார். எண்ணிக்கையிலும், ஆயுத தடவாளங்களிலும், செல்வத்திலும் தன்னை விட பல மடங்கு பலம் வாய்ந்த ஆங்கிலப் படையை துணிவுடன் எதிர்கொண்டார். தனது படையில் பெண்களுக்கான பிரிவை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் லக்ஷ்மி பாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1857ல் ஆங்கிலேயர் படையில் உள்ள பாரத சிப்பாய்கள் மூலம் மூண்ட சிப்பாய் கலகம் ஜான்சி ராணிக்கு கை கொடுத்தது. அதே ஆண்டு ஜூன் மாதம் வங்காள காலார் படையிலுள்ள புரட்சியாளர்களை கொண்டு தான் இழந்த ஜான்சி கோட்டையை மீட்டெடுத்தார் லக்ஷ்மி பாய். லக்ஷ்மி பாய் ஒரு சாதாரண பெண் அல்ல என்பதை உணர்ந்த ஆங்கிலப் படையினர் அவரின் திறமை கண்டு திகைத்தனர்.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஆங்கில அரசு சர் ஹ்யு ரோஸ் (Sir Hugh Rose) என்ற படைத்தளபதியை களம் இறக்கியது. இரண்டாம் சிரியா யுத்தம் மற்றும் கிரிமியன் போர் போன்ற பல களங்களை கண்ட ரோஸ் தலைமையில் ஒரு மாபெரும் படை ஜான்சி கோட்டையை முற்றுகையிட்டு குண்டு மழை பொழிந்தது. வலுவாக இருந்த ஜான்சி கோட்டைச் சுவர் பல நாட்கள் தாக்குபிடித்த பின்னர் சரிய தொடங்கியது. ஆங்கில படை முன்னேறி கோட்டைக்குள் புகுந்த நிலையில் ஜான்சியிலிருந்து தப்பி தாத்தியா தோபே மற்றும் நானா சாஹிப் துணையுடன் மீண்டும் ஆங்கிலப் படையை தாக்க முடிவு செய்தார் லக்ஷ்மி பாய். தனது அந்தரங்க காவலர்கள் மற்றும் தன் மகன் தாமோதர் ராவ் ஆகியோருடன் தன் குதிரையான பாதலுடன் தப்பி சென்றார். கல்பி என்ற இடத்தில் தாத்தியா தோபேயுடன் சேர்ந்து குவாலியர் கோட்டையை வந்தடைந்தார் லக்ஷ்மி பாய். அங்கு இருந்த சிந்தியா மன்னர் தப்பி செல்லவே குவாலியரில் மராட்டிய அரசின் பிரதிநிதியாக ராவ் சாஹிபை நியமித்தார் லக்ஷ்மி பாய்.

இந்நிலையில் ரோஸ் தலைமையிலான ஆங்கில படை குவாலியர் நோக்கி முன்னேறியது. ஜூன் மாதம் 1858ல், குவாலியர் அருகே ஆங்கில படையுடன் லக்ஷ்மி பாய் போரிட்டார். இப்போரில் வீரத்துடன் ஆங்கில படையை எதிர்கொண்ட லக்ஷ்மி பாய் படுகாயமுற்றார் பின்னர் அம்மாதம் 18ம் நாள் தனது 29வது வயதில் வீர சொர்கம் அடைந்தார்.

பல களங்களில் வெற்றி பெற்ற ஆங்கில படைத்தளபதி ரோஸ் தனது குறிப்பேட்டில் ‘தான் எதிர்கொண்ட இந்தியர்களில் லக்ஷ்மி பாய் மிகவும் ஆபத்தானவர்’ என பதிவு செய்துள்ளான்.

பின்னாட்களில் 1942ல் நம் விடுதலைக்காக போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் உருவாக்கிய இந்திய தேசிய படையின் பெண்களுக்கான பிரிவிற்கு ஜான்சி ராணி படைப்பிரிவு எனப் பெயரிட்டார்.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் உயிரை துறந்த லக்ஷ்மி பாயின் கனவு சுமார் 89 ஆண்டுகள் கழித்து 1947ல் பலித்தது. சுதந்திரத்தின் முதல் போர் வாயிலாக அவர் இட்ட விதை விருக்ஷமாக பாரதமெனும் பார் போற்றும் தேசமாக இன்று நம்மிடையே ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

மறைந்த லக்ஷ்மி பாய் வீர கதைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், புதினங்கள், நாடகங்கள், திரைக்காட்சிகள் போன்ற படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

தனது இளம் வயதிலேயே இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் நமக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து வரும் லக்ஷ்மி பாயின் பெருமைகளை அவரின் பிறந்த நாளான இன்று போற்றி வணங்குவோம்.

  • திரு. ஸ்ரீகுமார்.

ஜெய் ஹிந்த்!!


Share it if you like it