திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை, பாடம் கற்றுக் கொள்ள அனுமதிக்காமல் மண்வெட்டி மற்றும் மண் அள்ளுவதற்கு வாளியை தூக்க செய்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண் அகற்றப்பட்டு, மற்றொரு இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும் போது, நிதி இல்லையென்றாலும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை தொழிலாளர்களாக அடிக்கடி பயன்படுத்தும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பள்ளியில் மாணவர்களை மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தியது தொடர்பாக, தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாணவர்களை பிற பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.