தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கல்வி பயில லண்டன் சென்றுள்ளதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்சியின் அன்றாட பணிகளை கவனிக்க, ஹெச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான கல்வி பயில்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து சென்றுள்ளார். செப்டம்பர் முதல் நவம்பர் வரை மூன்று மாதங்கள் அவர் அங்கு தங்கி கல்வி பயில உள்ளார். இக்காலக்கட்டத்தில் தமிழக பாஜகவின் அன்றாட கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, பாஜக மூத்தத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, பொதுச் செயலாளர்களான எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம. சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.