கலாச்சார சீரழிவில் மாணவர் சமூகம் – தலைமுறையை சீரழிக்கும் திரைப்பட மோகம்

கலாச்சார சீரழிவில் மாணவர் சமூகம் – தலைமுறையை சீரழிக்கும் திரைப்பட மோகம்

Share it if you like it

தன்னிலை மறந்து திரைப்பட மோகத்தில் சீரழியும் சமகால குழந்தைகள் கவனத்திற்கு.

நமது பாட்டன் – பூட்டன் காலத்தில் கூட திரைப்படம் இருந்தது. அவர்களுக்கு வீண் செலவை தரும் ஒரு தேவையற்ற பொழுதுபோக்கு மட்டுமே. அதனால் அதை விட்டு எட்டி நின்றார்கள். நமது தாத்தா – பாட்டி காலத்தில் கூட எம்ஜிஆர் – சிவாஜி என்று இரு பெறும் ஆளுமைகள் இருந்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்து கிடைத்த நல்ல விஷயங்களை படிப்பினைகளாக பார்த்தார்களே தவிர, திரைப்படத்தை வாழ்க்கையாகவோ வழிகாட்டியாகவோ பார்க்கவில்லை. அதனால் தான் அவர்களால் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ முடிந்தது. அதன் வெளிப்பாடுதான் நம் தாய் – தகப்பனுக்கு பிறவி கொடுத்து நம் மூலம் வம்சாவழியை பார்க்க வைத்தது.

நம் தாத்தாவும் பாட்டியும் பொறுப்பான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்ததினால் தான் நம் தாய் தகப்பனுக்கு நல்ல வாழ்க்கையும் சமூகத்தில் உரிய அந்தஸ்தும் கிடைத்தது. அதன் வெளிப்பாடு தான் கலாச்சார வழியில் அவர்கள் ஒரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டு உங்கள் மூலம் வம்சா வழியை பார்க்க முடிந்தது.

உங்கள் தாய் – தகப்பன் காலத்தில் கூட ரஜினிகாந்த்- கமலஹாசன் என்று இரு பெரும் திரைப்பட ஆளுமைகள் இருந்தார்கள் . ஆனால் உன் தாயும் தந்தையும் திரைப்படத்தை ஒரு பொழுது போக்காக விருப்பமான கேடிக்கையாக மட்டுமே பார்த்தார்கள். பண்டிகை காலங்களில் குடும்பமாக உறவுகள் ஒன்று கூடி கொண்டாடும் ஒரு பொழுது போக்காக மட்டுமே திரைப்படத்தையும் திரையரங்கையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். மற்றபடி சொந்த வாழ்க்கையில் திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கைகளை தள்ளி வைத்தார்கள். அதனால் தான் அவர்களால் ஒரு கௌரவமான வாழ்க்கையை மரியாதையாக இன்றளவும் வாழ முடிகிறது.

உங்கள் தாய் தகப்பனின் மரியாதையான வாழ்க்கை தான் உனக்கு பிறவியும், உணவு – உடை- இருப்பிடம் – கல்வி- போக்குவரத்து என்று வாழ்வின் அத்தனை தேவைகளையும் கிடைக்க செய்கிறது. கையில் தாராளமாக பணம் புழங்கச் செய்து இந்த திரைப்படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று கொண்டாட்டமாக, குதூகலமாக பொதுவெளியில் சமூக ஊடகம் வழியே கருத்துச் சொல்லும் அளவில் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.

ஆனால் தேசிய தெய்வீக உணர்வுகளையும் பண்பாடு கலாச்சாரம் தனிமனித ஒழுக்கம் சுய சிந்தனை பன்முகத் திறமைகளை வளர்த்திருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், மதமாற்றம் மத வியாபார தலங்களாகவும் , இந்த தேசத்திற்கு எதிராக வரும் தலைமுறையை மடைமாற்றும் பிரிவினைவாதிகளின் கூடாரமாகவும் மாறிப்போனதன் விளைவு இன்று நீங்கள் பதின்ம வயதில் அந்நிய மோகம் திரைப்படம் மோகம் என்னும் கலாச்சார சீரழிவின் உச்சத்தில் வீதியில் வந்து நிற்கும் அவலம்.

பெற்றோர் உங்களுக்கு தாராளமாக கையில் பணம் கொடுப்பதன் காரணம் போக்குவரத்து உணவு சிற்றுண்டி என்று உன் அன்றாட தேவைகளில் நீங்கள் சிரமமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தானே? இப்படி நீங்களும் சீரழிந்து உன் எதிர்காலத்தையும் கெடுத்து உன் குடும்ப கவுரவத்தையும் தெருவில் நிறுத்துவதற்கு அல்ல என்பதை நீங்கள் எப்போது உணர்வீர்கள்.

சமகாலத்தில் இருக்கும் தாய் தந்தையர்கள் தங்களின் உழைப்பு வருவாயின் பெரும் பகுதியை தங்கள் பிள்ளைகளின் கல்வி மருத்துவத்திற்காக மட்டுமே செலவு செய்து வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்த பின்பும், தங்களின் வாழ்வை தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து வாழும் அவர்களை மறந்து அவர்களின் மானத்தை வீதியில் விலை பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?.

உங்களின் கல்வி- ஒழுக்கம் -அன்றாட நடவடிக்கைகளில் ஏதேனும் குறை கண்டால், அதை சரி செய்யும் விதமாக கண்டித்தாலோ, அல்லது ஆத்திரத்தில் உங்களைக் கடிந்து கொண்டாலோ அதை அவமானமாக கருதும் குழந்தைகள் , அதற்காக பெற்றோரையே எதிர்த்து பேசவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாக கூட நடந்து கொள்ளவும் சிறிதும் தயங்காது தன்மானம் சுய கௌரவம் பற்றி பெற்றோர்களுக்கு வகுப்பெடுக்கும் நீங்கள் , அவர்களின் அறிவுரைகளை மறந்து எவனோ ஒரு கூத்தாடியை தலையில் வைத்துக் கொண்டாடி, அதை தெருவில் திருவிழா போல் கொண்டாடுவதற்கு ஏன் வெட்கப்படவில்லை? எங்கே போனது உன் தன்மானமும் சுய கௌரவம் ?.

உன் போல பதின்ம வயதை கடந்து வந்தவர்கள் தான் உன் தாய் – தகப்பன் கூட. அவர்களுக்கும் உனக்கு இருப்பதைப் போல் எவ்வளவோ ஆசைகள் கொண்டாட்டங்கள் கனவுகள் இருந்திருக்கும். அவர்கள் மனம் போன போக்கில் அதன் பின்னே போயிருந்தால் இன்று அவர்களே உன் போல் தெருவில் தான் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே வாழ்க்கை இல்லாத போது உனக்கு இங்கு பிறவியே இருந்திருக்காது.

ஆனால் வயதிற்கே உண்டான அத்தனைக்கும் அடிமையாகாமல், கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் – வீட்டில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு கண்ணியமான வளர்ப்பிலும் வாழ்விலும் அவர்கள் இன்று வரை இருப்பதால்தான் சொந்த காலில் நிற்க முடிகிறது. அந்த வருவாயும் வாழ்வும் தன் சந்ததிக்கும் எதிர்காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உங்களை ஓரளவு சுதந்திரத்தோடும், பெரும் பொருளாதார சுதந்திரத்தோடும் வளர்க்கிறார்கள்.

தாய் தந்தையர்கள் தங்களுக்கு கிடைத்தது எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு இன்னும் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும், தங்களுக்கு கிடைக்காமல் போனதை எல்லாம் எப்படியாவது நாம் நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து விட வேண்டும் என்று வைராக்கியத்தோடு வாழ்வதாலும் தான் ஒரு காலத்தில் எங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று உங்களுக்கு சர்வ சாதாரணமாக தினசரி தேவையாக மாறிவிட்டது.

ஆனால் பெற்றோரை வெறும் பணம் கொடுக்கும் எந்திரமாகவும் , உங்கள் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய வெறும் வேலைக்காரர்களைப் போலவும் , கற்பிக்கும் குருமாரை கூட உங்களுக்கு ஊதியத்திற்கு உழைக்கும் கூலிக்காரர்கள் போல என்னும் மனோபாவம் தான் இன்று உங்களை மனம் போன போக்கில் தான் என்ற அகந்தையில் போக வைத்து அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இதில் உங்களை மட்டும் குறை சொல்லி பலனில்லை. பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களை இழுத்து பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிக்காமல், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்காமல் கட்டுப்படுத்தாமல் இழத்துப் பிடித்தால் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுவானோ? கண்டித்தால் தற்கொலை செய்து கொள்வானோ ? என்று பயந்து வாழும் பெற்றோர்களுக்கு நீங்கள் தேடிக் கொடுக்கும் வெகுமதி இதுவே.

எங்களின் காலம் போல நெற்றியில் நீரும் நிறைந்த திலகமுமாய் இருக்கும் ஆசிரியர்கள் இயல்பிலேயே தெய்வ நம்பிக்கை வரலாற்று அறிவு ஆன்மீக ஞானம் கொண்ட குருவாக இருந்தவர்களிடம் நீங்கள் பாடம் படிப்பீர்களே ஆனால் அவர்களிடம் இருக்கும் ஒழுக்கமும் கல்வியும் ஞானமும் உங்களுக்கும் வாய்க்கப் பெற்றிருக்கும்.

ஆனால் பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்ற பெயரில் கண்ட கருமாந்திரங்களும் பாடமாகவும், பதின்ம வயதில் இருக்கும் பெண் குழந்தைகளை கூட பெண்டாள நினைக்கும் காமுகர்களை ஆசிரியர்களாகவும், ஒழுக்கம் கட்டுப்பாடு கண்ணியம் முயற்சி உழைப்பு இவற்றையெல்லாம் புறம் தள்ளி மனம் போன போக்கில் வாழ்வதையே தனிமனித சுதந்திரமாகவும் நிறுவிய திராவிடத்தின் விஷ விருட்சத்தின் கனிகளாக நீங்கள் மாறியது இந்த மண்ணின் சாபக்கேடு.

பாலும் தேனும் ஊற்றி வளர்த்தாலும் முள்ளில் பூ பூப்பதில்லை. விஷ விதையில் இருந்து மாங்கனிகள் வருவதில்லை. முற்போக்கு என்ற பெயரில் ஒழுக்கம் கட்டுப்பாடு கண்ணியம் எதுவும் உண்மையாக தப்பி பிழைக்க முடியாது என்பதற்கு சமகால சீரழிவுகளே உதாரணம் .

போலி பகுத்தறிவின் வீழ்ச்சியே தேசியத்தை நிலை நிறுத்தும். தேசிய தெய்வீக வளர்ப்பே நம் சந்ததிகளை வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூகம் அரசாங்கம் என்ற பஞ்சமுகமும் சுய விருப்பு வெறுப்பு கடந்து ஒன்றுபட்டு களம் இறங்கினால் மட்டுமே நம் சந்ததிகளும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்படும்.


Share it if you like it