நேற்று (டிசம்பர் 25), லட்சுமி என்ற ஹிந்து பெண், ஆகாஷ் மவுரியா என்கிற தனது 24 வயது கணவர் வஞ்சகமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆகாஷ் மவுரியாவின் 15 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலான பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த காணொளியில் ‘மேரா தில் தோ முகமது’ என்ற பின்னணிப் பாடலும், ‘இன்று நான் முஸ்லிமாகிவிட்டேன்’ என்ற தலைப்பும் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி, குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மற்றும் ஷபானா கான் என்ற முஸ்லிம் பெண் தன்னுடைய ஹிந்து கணவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி முஸ்லீமாக மாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஹிந்து பெண் லட்சுமி கூறியிருப்பதாவது : என் கணவர் ஆகாஷ் மவுரியா கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இசத்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மத் லட்சுமிபூரில் டெலிவரி செய்யும்போது 21 வயதான முஸ்லீம் பெண்ணான ஷபானா கானை சந்தித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.இதனை சாதகமாக பயன்படுத்தி ஷபானா கான் அவரை தனது காதல் வலையில் சிக்க வைத்து முஸ்லீமாக மதம் மாற்றியுள்ளார். மேலும் 21 டிசம்பர் 2023 முதல் தனது கணவர் ஆகாஷ் மவுரியா வீடு திரும்பவில்லை. வீட்டை விட்டு வெளியேறும் போது தன் கணவர் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும், ₹23,000 பணத்தையும் எடுத்துச் சென்றதாக அவர் கூறினார்.ஷபானா கான் வீடியோ கால் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆகாஷ் மவுரியா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், ஆகாஷ் மவுரியாவை நான் தொடர்பு கொள்ள முயன்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் என்று லட்சுமி கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ராகுல் பாடி, ஆகாஷ் மவுரியா, சுபாஷ் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்து வாக்குமூலம் பதிவு செய்ததாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.