கந்து வட்டி கொடுமையால் கடற்கரையில் தஞ்சம் அடைந்த பெண் : பகீர் சம்பவம் !

கந்து வட்டி கொடுமையால் கடற்கரையில் தஞ்சம் அடைந்த பெண் : பகீர் சம்பவம் !

Share it if you like it

கோயம்புத்தூரை சேர்ந்த ரெஜினா என்ற பெண், தன் கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக லோடு வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் என்பவரிடமிருந்து வீடு கட்டுவதற்காக ஐந்து சதவிகித வட்டிக்கு 2.50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார் ரெஜினா. அதற்காக மாதந்தோறும் 12,500 ரூபாய் வட்டியை கட்டி வந்துள்ளார். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ரெஜினா விபத்தில் சிக்கியதில், அவருக்கு காலில் அடிப்பட்டது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் ரெஜினா. வேலைக்கு செல்லாததால் வட்டித்தொகையை செலுத்த முடியாமல் தவித்திருக்கிறார். அச்சமயத்தில் வட்டித் தொகையை கேட்டு தொடர்ச்சியாக விஜயகுமார் என்பவர் ரெஜினாவை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் விபரீத முடிவெடுக்க யோசித்து கிளம்பியுள்ளார். அந்நேரத்தில் அவரது மகனும் அவருடன் வந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை மெரினா கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் சுமார் 5 நாட்களாக பட்டினம்பாக்கம் கடற்கரையில் இரவு நேரத்தில் தங்கியுள்ளனர். . அங்கு போலீசார் துரத்தியதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கி வந்துள்ளனர். அங்கேயும் தங்கக்கூடாது என போலீசார் துரத்தியதால் வேறு வழியின்றி மெரினா கடற்கரையில் தவித்து வந்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அந்தப் பெண்ணிற்கு அவர் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

இரண்டு மாத வட்டியை கட்டாததால் விஜயகுமார் என்பவர் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி மிரட்டியதாகவும், செல்போன் மூலமாக மிரட்டியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவரிடம் ரெஜினா தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஐந்து நாட்களாக வாழ வழியில்லாமல் தற்கொலை எண்ணத்துடன் இருந்து வருகிறேன். என்னுடன் மகன் இருந்ததால் மனம் மாறி இருக்கிறேன்.

எனக்கு மனசாட்சி உள்ளது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திவிடுவேன், அசல் தொகையை மட்டும் கொடுக்க யாராவது வழிவகை செய்ய வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தகவலறிந்த பட்டினம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ரெஜினாவிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கந்து வட்டியின் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்ளும் பாமர மக்களின் அவலங்களும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இதனை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் கந்து வட்டி கொடுமை இல்லாமல் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *