குஜராத்தில் நடைப்பெற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்நிலையில் ABVP தேசிய செயற்குழு உறுப்பினர் அருண் பிரசாத் மற்றும் ABVP தென் தமிழக மாநில இணை செயலாளர் விஜயராகவன் அவர்கள் இணைந்து வெளியிடும் பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயற்குழு கூட்டம் ஜூன் 07, 08, & 09 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் முக்கியமான மாணவப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேற்படி தேசிய செயற்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் : 1
நுழைவுத்தேர்வு உட்பட அனைத்துவிதமான தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவுகளை தடுத்து மற்றும் வெளிப்படைத்தன்மையுடைய மதிப்பீடு முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும்.
தீர்மானம் : 2
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களிலும் புதிய கல்விக் கொள்கை 2020 துரிதமாக அமல்படுத்தப்பட வழிவகை செய்ய வேண்டும்.
தீர்மானம் : 3
தற்காலிக வளாகங்களில் செயல்பட்டு வரும் முதன்மை கல்வி நிறுவனங்கள் விரைவில் நிரந்தர வளாகங்கள் கட்டப்பட்டு மாற்றப்பட வேண்டும் மற்றும் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நாடு முழுவதும் உயர் கல்வி துறைக்கான உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உயர்கல்விக்கான சூழல் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
தீர்மானம் : 4
2047க்குள் பாரதத்தை வளர்ந்த நாடாக உயர்த்தும் இலக்கில் இன்றைய இளைஞர்கள் – அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேசத்தின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான சமூக அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள பங்காற்ற வேண்டும்.
தீர்மானம் : 5
புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை மையப்படுத்தி தற்சார்பு பாரதத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், சட்டத்துக்கு புறம்பான ஊடுருவலை தடுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சர்வதேச எல்லைகள் மூலம் போதைப்பொருள் ஊடுருவலை தடுக்க வேண்டும், இலவசமயமாக்கும் அரசு திட்டங்களை தடை செய்ய வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மற்றும் மலிவான மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
மேற்கூறிய 5 தீர்மானங்கள் மாணவ பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு மாணவ பிரதிநிதிகளின் பரிந்துரைக்கக்கேற்ப ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து :
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 60 பேரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை ABVP வன்மையாக கண்டிக்கிறது
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 150க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததில் தற்போது பலி எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை ABVP பதிவு செய்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் பலியான போதும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தவறியது மட்டுமல்லாமல் தொடர் கள்ள சாராய விற்பனையை கண்டுகொள்ளாமல் மெத்தனபோக்கை கையாண்ட தமிழக அரசை ABVP வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் சாராய வியாபாரம் மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அந்த எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும்.
கஞ்சா, குட்கா, Cool Lip மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் இதே நடவடிக்கைகள் எடுக்கப்பட தகுந்த சட்டதிருத்தங்கள் உடனடியாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
NEET மற்றும் NET தேர்வு முறைகேடுகள் குறித்து :
NEET UG தேர்வு முறைகேடு உட்பட தேசிய தேர்வுகள் ஆணையம் (NTA) நடத்திய தேர்வுகளில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் ABVP வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிப்படையான CBI விசாரணையை வலியுறுத்துகிறது.
NTA சமீபத்தில் NEET-UG 2024 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. வெளியிடப்பட்ட முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது, 67 மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்றுள்ளனர், இதில் 7 மாணவர்கள் ஹரியானாவில் உள்ள ஒரே மையத்திலிருந்து தேர்வெழுதியுள்ளனர். வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேற்படி முறைகேடுகளில் சம்மந்தபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்படுவதோடு மட்டுமல்லாமல், வரும்காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம் நிறைவேற்றப்படவேண்டும். தேர்வு மையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு, அரசு மையங்களில் தேர்வு நடத்துவது, தேர்வில் அரசு நியமித்த கண்காணிப்பாளர்களை நியமிப்பது, போன்ற வழிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ABVP என்டிஏ தலைமையகம் உட்பட நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்தது.
தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி சூழ்நிலை :
தமிழகத்தில் சீர்கெட்டுக்கொண்டிருக்கும் உயர்கல்வித் தரம் கவனிக்கபடவேண்டும், நிலுவையிலுள்ள பல்கலைகழக துணைவேந்தர் நியமனங்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று ABVP வலியுறுத்துகிறது.
தமிழகத்தின் உயர் கல்வியின் தரம் கவலைக்கிடமான நிலைமைக்கு சென்றுகொண்டிருப்பதை ABVP சுட்டிக்காட்டுகிறது. பாரம்பரியமான மெட்ராஸ் பல்கலைக்கழகம் உட்பட தமிழககத்தில் 3 பல்கலைகழகங்களில் பல மாதங்களாக துணை வேந்தர்கள் நியமிக்கபடாமல் இருப்பது, அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிதி நிலைமை மோசமாகியது, அரசுகல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசின் அலட்சியப்போக்கு, ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் ராஜினாமா செய்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் குளறுபடிகளும் தமிழகத்தின் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. UGC விதிமுறைகளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவிட்டாலும் துணை வேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதி கட்டாயமாக இருக்க வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரும் தமிழக அரசு இதனை பொருட்படுத்தமல் மேல்முறையீடு வழக்குகள் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அலட்சியபடுத்தும் செயலாகும்.
நீதிபதி.சந்துரு அவர்களின் அறிக்கை குறித்து :
அடிப்படை உண்மையற்ற ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள, நீதிபதி கே.சந்துரு குழுவின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் தமிழக அரசு ஏற்கக் கூடாது.
மாணவர்கள் மத்தியில் சாதி மாத வேறுபாடுகள் இல்லாமல் சமத்துவமும் நல்லிணக்கமும் பெருக முறையான வழிமுறைகளை தேசிய கல்வி கொள்கை – 2020 விவரிக்கும் நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்காமல், அடிப்படை ஆதாரமின்றி ஹிந்துமத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதத்தில் நீதிபதி கே.சந்துரு குழுவின் அறிக்கை பரிந்துரைகள் அமைந்துள்ளன. மாணவர்கள் நெற்றியில் திலகம் வைக்ககூடாது, கையில் கயிறு கட்டகூடாது போன்ற பரிந்துரைகள், “கல்வி நிறுவனங்கள் காவிமையமாகாமல் கண்காணிக்க தனிப்படை” என்ற வார்த்தைகள், ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் நீதிபதி கே. சந்துருவின் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும், பரிந்துரைகளும் அமைந்துள்ளன. எனவே மேற்படி அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் சாதிய வேறுபாடுகளை களைய தேசிய கல்வி கொள்கை – 2020 ல் கொடுக்கபட்டுள்ள வழிமுறைகளை அமல்படுத்தப்படவேண்டும் என்றும் ABVP வலியுறுத்துகிறது.