மழைநீர் வடிகால்வாய் சரிவர மூடாததால் பள்ளத்தில் சிக்கி பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில் தினமலரில் பணிபுரியும் நபர் ஒருவர் பலியானதாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-
தினமலர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிவபிரகாஷ் என்ற இளைஞர் நேற்று முன்தினம் கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெரு அருகே தன் இருசக்கர வாகனத்தை செலுத்தி கொண்டிருந்த போது, மழை நீர் வடிகால்வாய்க்கு மூடிகள் போடப்பட்டு சரிவர மூடாத பள்ளத்தில் சிக்கிய நிலையில், பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில் பலியானது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொண்ட அனைத்து தெருக்களிலும் இதே நிலை தான் உள்ளது. ஏற்கனவே உள்ள நடைபாதைகளுக்கு அருகே பள்ளங்கள் தோண்டப்பட்டு அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்வாய்கள் முறையாக மூடப்படாமலும், சில இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் மீதான சிமெண்ட் அடுக்குகள் சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சாலைகளின் அகலத்தை பல மீட்டர்களுக்கு குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முறையான திட்டமிடுதல் இல்லாமல், மேலாண்மை இல்லாமல், அவசர அவசரமாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டதே இந்த நிலைக்கு காரணம். மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்ட பின்னர், தொலைபேசி, கேபிள், சென்னை குடிநீர், மின்வாரியம் போன்ற பல்வேறு பணிகளுக்காக தெருக்களை தோண்டி மேடு, பள்ளங்களை உருவாக்கியுள்ள நிலையில், 20 அடி சாலைகள் சுருங்கி 14 அடிகள் மட்டுமே வாகனங்கள் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில், வாகனங்களின், தெருவோர கடைகளின் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, விபத்துகள் அதிகரிக்க வழிவகுக்கின்றன. ஒழுங்கற்ற இந்த நிலையால், பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்த முடியாமல் சாலைகளில் தட்டு தடுமாறி உயிரை கையில் பிடித்து கொண்டு நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதில் எதிர்திசையில் செலுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் அராஜகங்கள், அலைபேசியில் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகளின் அலட்சியங்கள் என ஒவ்வொரு நொடியும் பதட்டத்திலேயே சென்னை வாசிகள் தெருக்களில், சாலைகளில் சென்று கொண்டிருப்பதற்கு காரணம் மாநகராட்சியின் மோசமான நிர்வாகம் மற்றும் திட்டமிடுதலே.
தி.மு.க ஆட்சி அமைத்த பின் சென்னையில் பெரும்பாலான சாலைகளே சீரமைக்கப்படவில்லை என்பதோடு, சீரமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிற சாலைகள் சீர்கெட்டு போய் விட்டன என்பதுமே கொடூரமான உண்மை. மக்கள் நலன் குறித்து, பாதுகாப்பு குறித்து, போக்குவரத்து குறித்து சிறிதளவும் கவலைப்படாமல் அலட்சிய போக்குடன் இந்த அரசு செயல்படுவது தான் திராவிட மாடலா ? மழை நீர் வடிகால்வாய்கள் அமைத்து விட்டோம் என்று பெருமை பொங்க பேசுபவர்கள், அவை அமைக்கப்பட்ட விதத்தையும், அந்த பணியினை முழுமையாக முடிக்காமல் விட்ட அலங்கோலத்தையும் சீர் செய்ய முன்வருவார்களா ?