ஹிந்து மதத்தை புண்படுத்தும் வகையில் மீண்டும் நடித்து புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் அமீர்கான்.
பொதுவாகவே, பாலிவுட் நடிகர்கள் தங்களது திரைப்படங்களில், ஹிந்து மதத்தையும், ஹிந்து தெய்வங்களையும், ஹிந்து சாமியார்களையும் இழிவுபடுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, நடிகர் அமீர்கானின் திரைப்படங்களில் ஹிந்து மத அவமதிப்பு சற்று தூக்கலாகவே இருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்து விட்டனர். பாய்காட் பாலிவுட் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ஹிந்தி திரைப்படங்களை புறக்கணிக்கத் தொடங்கினர். அந்த வகையில், அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் லால் சிங் சத்தா திரைப்படம் வெளியானபோது, பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா என்று ஹேஷ்டேக் உருவாக்கி வைரலாக்கினர். இதனால், அப்படம் படுதோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து, ஹிந்துக்களிடம் கெஞ்சினார் அமீர்கான். ஆகவே, அமீர்கான் மனம் திருந்தி விட்டதாக ரசிகர்கள் நம்பினர். இந்த சூழலில்தான், மீண்டும் ஹிந்து மத சடங்கை அவமதிக்கும் வகையில் நடித்து மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமீர்கான். அதாவது, தனியார் வங்கி ஒன்று, தனது வங்கியை விளம்பரப்படுத்தும் வகையில், ஒரு விளம்பர நிகழ்ச்சியை தயாரித்தது. இந்த விளம்பரத்தில் நடிகர் அமீர்கானும், நடிகை கியாரா அத்வானியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தில் ஹிந்து மத முறைப்படி திருமணமான மணமகனும், மணமகளும் சொந்த வீட்டுக்கு வருகின்றனர். பொதுவாக, புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும்போது, முதலில் மணமகள்தான் வலதுகாலை எடுத்து வைத்து வீட்டுக்குள் வருவார். அதன் பிறகுதான், மணமகன் வருவார். ஆனால், இந்த விளம்பரத்தில் முதலில் மணமகனான அமீர்கான் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வருகிறார். இதுதான் ஹிந்து மத சடங்குகளை அவமதிப்பதுபோல் இருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
இதுகுறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக மற்றும் மத மரபுகளை மாற்றுவதற்கு வங்கிகள் எப்போது பொறுப்பாகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் ஏன் ஹிந்து மத சடங்குகளை மட்டுமே குறிவைத்து விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, அமீர்கானுக்கும், கியாராவுக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர். தவிர, இந்த விளம்பரத்தை தயாரித்த தனியார் வங்கிக்கு எதிராகவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விளம்பரங்களில் நடிப்பதை நடிகர் அமிர்கான் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.