கோவையைச் சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளாவுக்கு நடிகர் கமலஹாசன் கார் வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், கார் கொடுக்கவில்லை, கார் வாங்குவதற்கு அட்வான்ஸாக 3 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தார் என்று அவருத தந்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவரின் மகள் ஷர்மிளா. தற்போது 24 வயதாகும் இவர், கோவை காந்திபுரம் டூ சோமனூர் வழியில் இயங்கும் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். இளம்பெண் ஒருவர் பஸ் ஓட்டுவது தமிழகம் முழுவதும் பரவி, பிரபலமடைந்தார். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழியும், ஷர்மிளாவின் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். அப்போது, பெண் கண்டக்டர், கனிமொழியிடம் டிக்கெட் வாங்கினார். இதுகுறித்து கூறிய ஷர்மிளா, எம்.பி. கனிமொழிக்கு நான் டிக்கெட் வாங்குகிறேன் என்று சொல்லியும், பெண் கண்டக்கடர் அவரிடம் டிக்கெட் பெற்றதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, டிரைவர் பணியில் ஷர்மிளா நீக்கப்பட்டதாக அவரும், அவரது தந்தையும் கூறினார்கள்.
இந்த நிலையில்தான், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷர்மிளாவை நேரில் சந்தித்து, டிரைவரானதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, அவருக்கு கமல் கார் பரிசளித்ததாக செய்திகள் பரவின. 12 லட்சம் மதிப்புள்ள மாருதி கம்பெனியின் காரை பரிசளித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஷர்மிளா குடும்பத்தினர் கமல்ஹானை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகின.
ஆனால், உண்மையில் ஷர்மிளாவுக்கு கமலஹாசன் கார் பரிசளிக்கவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை மகேஷ் கூறுகையில், “கமல் சார் கார் கொடுக்கவில்லை. கார் வாங்குவதற்கு அட்வான்ஸ் பணமாக 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை மட்டுமே கொடுத்தார். மேலும், வேலை பறிபோனதால் சோர்வடையாமல் தைரியாக இருக்க வேண்டும் என்றும் ஷர்மிளாவிடம் கூறினார். அதேபோல, உங்களைப் போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றும் கமல் கூறியதாக தெரிவித்தார்.