நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர் OTTO நிறுவனத்தின் காப்பி என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் 48-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் (ஜூன் 22) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது 66-வது படமான ‘வாரிசு’ திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்போஸ்டர் வெளியானதும், வழக்கம்போல வேறு ஏதோ ஒரு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கினர். குறிப்பாக, துல்கர் சல்மான் நடித்த OTTO நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து காப்பி அடித்திருப்பதாக பதிவிட்டு வந்தனர். தவிர, கண் தொடர்பான நிறுவனத்திற்கான புகைப்படத்தை எடுத்து background படமாக வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் எனவும் படக்குழுவை விமர்சித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதா என்று தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு OTTO நிறுவனமே விளக்கம் அளித்திருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக்கப்படும் விளம்பர போஸ்ட் மற்றும் ‘வாரிசு’ போஸ்டரை இணைத்து, “எங்களுடையே அனைத்து விளம்பரங்களுமே அசலாகத்தான் இருக்கும். வாரிசு பட போஸ்டர் OTTO-வின் விளம்பரத்துடன் தொடர்புடையது அல்ல. சில மீம் கிரியேட்டர்களால் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படக்குழுவுக்கு எங்கள் தரப்பிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.