நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா, அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவாகிவரும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மீண்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை துவக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை கருவாக வைத்து எடுக்கப்பட்ட படம். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் இப்படம் உருவாகி இருந்தது. அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாததால், அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சூர்யா அடுத்த கட்டத்துக்குச் செல்ல துணைப் புரிந்தது என்றால் மிகையாகாது. இப்படம் வெளியானது முதல் தற்போதுவரை சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.
இதையடுத்து, இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுதா கொங்கரா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு வரும் இப்படத்தில், சூர்யாவின் ‘மாறா’ கதாபாத்திரத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடிக்கிறார். தமிழில் சூர்யாவின் ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தில், பிரபல தொலைக்காட்சி தொடரான ‘Meri Aashiqui Tum Se Hi (தமிழில் உறவே உயிரே)’ நாடகத்தில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா மதன் நடித்து வருகிறார். இப்படத்தை தமிழில் தயாரித்த சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெயின்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது.
இந்த நிலையில்தான், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய்குமாருடன் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். ஏற்கெனவே, நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘ரோலக்ஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் கடைசி சில நிமிடங்கள் வில்லனாக வந்து மிரட்டினார் சூர்யா. ஆனால், இந்தப் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், சூர்யா ரசிகர்களுக்கு குஷிதான்.