மன்னிப்புக் கேட்ட கனிமொழி: ஏற்க மறுத்த குஷ்பு!

மன்னிப்புக் கேட்ட கனிமொழி: ஏற்க மறுத்த குஷ்பு!

Share it if you like it

தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் அவதூறாகப் பேசியதற்கு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மகளிர் அணித் தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதேபோல, பேச்சாளர் சைதை சாதிக்கும் மன்னிப்புக் கேட்டிருக்கும் நிலையில், அவரது மன்னிப்பை ஏற்க மறுத்து விட்ட குஷ்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டானுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆர்,கே.நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.க.வில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை ஐட்டங்கள் என்று கொச்சையாகப் பேசியதோடு, குஷ்புவைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்து விட்டு, தி.மு.க.வினரின் சமூகநீதி, சுயமரியாதை, பெண்களுக்கான மரியாதை குறித்து விமர்சனம் செய்து வந்தனர். தவிர, இது பா.ஜ.க.வினர் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பு பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடிகை குஷ்பு தனது ட்விட்டரில், “பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும் இச்செயல், அவர்கள் வளர்ந்த விதத்தையும், அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலையும் காட்டுகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று அழைக்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பி இருந்ததோடு, தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழியையும் டேக் செய்திருந்தார்.

இதைப் பார்த்த கனிமொழி, ட்விட்டரில் அளித்த பதிலில், “ஒரு சக பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது பேசப்பட்ட இடம், அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்று எதுவாக இருந்தாலும் இதை ஏற்க முடியாது. வெளிப்படையாக இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் ஸ்டாலினாலும், தி.மு.க.வாலும் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் குஷ்பு, பேச்சாளர் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

இதனிடையே, தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தான் பேசியதால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, நடிகைகள் பற்றியும், குறிப்பாக குஷ்பு பற்றி பேசியது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக்கிடம் தனியார் செய்திச் சேனல் ஒன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேட்டி கண்டது. அதற்கு, குஷ்புவைப் பற்றிப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டார் சைதை சாதிக். ஆனால், இந்த மன்னிப்பை குஷ்பு ஏற்க மறுத்து விட்டார். பேச்சாளர சைதை சாதிக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த சூழலில், குஷ்பு மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it