பா.ஜ.க. பிரமுகரும், பிரபல நடிகையுமான சோனாலி போகத் மர்ம மரணம் குறித்த வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.
ஹரியானாவைச் சேர்ந்தவர் நடிகை சோனாலி போகத். 43 வயதான இவர், பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராவார். கடந்த மாதம் 22-ம் தேதி கோவா வந்திருந்த இவர், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். அங்கு, மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், சோனாலியின் உதவியாளர்கள் குளிர்பானத்தில் வேறு எதையோ கலந்து குடிக்கக் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சோனாலியின் உதவியாளர்கள் 2 பேர், விடுதி உரிமையாளர், போதைப் பொருள் கடத்தல்காரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இந்த வழக்கில் பல மர்மங்கள் இருப்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சோனாலியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், ஹரியானா முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டாரும் சி.பி.ஐ. விசாரணை கோரி இருந்தார். இதையடுத்து, கோவா முதல்வரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான பிரமோத் சாவந்த் மேற்படி வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து பிரமோத் சாவந்த் கூறுகையில், “சோனாலி மரண வழக்கில், கோவா போலீஸார் திறமையாக விசாரணை நடத்தி சில உண்மைகளை கண்டுபிடித்திரக்கிறார்கள். ஆனாலும், சோனாலி குடும்பத்தினர் சி.பி.ஐ. விசாரணைக்கு வற்புறுத்துவதால், இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்” என்றார். இதைத் தொடர்ந்து, சோனாலி மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.