மதுரை அருகே அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ.வின் காரை எரித்ததோடு, வீட்டு ஜன்னல் கண்ணாடிகள், இரு சக்கர வாகனங்கள், டி.வி., வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ் ஆகியவற்றையும் சூறையாடிய தி.மு.க. கிளைச் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மதுரை அருகேயுள்ள கருவனூரைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், 2001 – 2006-ம் ஆண்டில் சமயநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். கருவனூர் கிராமத்தில் பாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் பொன்னம்பலத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகனுக்கும் பிரச்னை இருந்து வந்தது. இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவிழா தொடங்கி நடந்து வந்த நிலையில், பொன்னம்பலத்துக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. பிரமுகர் வேல்முருகன், நேற்று நள்ளிரவு பொன்னம்பலம் வீட்டுக்குள் புகுந்து, டி.வி. வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டி ருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, அவரது காருக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். மேலும், வேல்முருகன் தரப்பினர் தாக்கியதில் பொன்னம்பலம் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம்பலம் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. நிர்வாகி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.