பா.ஜ.க. வளர்ச்சி மடை திறந்த வெள்ளம்போல் இருக்கும்: அ.தி.மு.க. பொன்னையனுக்கு அண்ணாமலை பதிலடி!

பா.ஜ.க. வளர்ச்சி மடை திறந்த வெள்ளம்போல் இருக்கும்: அ.தி.மு.க. பொன்னையனுக்கு அண்ணாமலை பதிலடி!

Share it if you like it

தமிழகத்தில் 2024-ம் ஆண்டு மடை திறந்த வெள்ளம்போல பா.ஜ.க. வளர்ச்சி இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையனுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்து வரும் அ.தி.மு.க., 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியும் வைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி நீடித்த நிலையில், பா.ஜ.க.வால்தான் அ.தி.மு.க. தோற்றதாகவும், அ.தி.மு.க.வால்தான் பா.ஜ.க. தோற்றதாகவும் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதன் காரணமாக, சில குழப்பங்கள் ஏற்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்டன. எனினும், இதன் பிறகும் இரு கட்சியினரும் இணக்கமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், அமைப்புச் செயலாளருமான பொன்னையனின் நேற்றைய கருத்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் புருவங்களை உயர்த்தச் செய்திருப்பதோடு, பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதாவது, நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பொன்னையன், “பா.ஜ.க. நமக்கு நட்புக் கட்சிதான் என்றாலும், அ.தி.மு.க.வின் கொள்கையோடு, அக்கட்சி ஒத்துப்போவதில்லை. தவிர, தமிழகத்தின் உரிமைக்காக பா.ஜ.க. போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை. பா.ஜ.க. தனது கொள்கையை மாற்றி கொள்ளாதவரை அக்கட்சியால் தமிழகத்தில் வளர முடியாது. மாநிலம் சார்ந்த பிரச்னைகளான காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரங்களில் பா.ஜ.க. இரட்டை வேடம் போடுகிறது. ஆகவே, இதனை எச்சரிகையுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு பணியை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கு சிண்டு முடிந்துவிடும் வகையில் பேசியிருந்தார்.

இவரது பேச்சு அ.தி.மு.க. தலைவர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருப்பதோடு, பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கு சிண்டு முடிந்து பிரச்னையை உருவாக்கிவிட்டு, தி.மு.க.வுக்கு கட்சி தாவப் போகிறார் பொன்னையன் என்று விமர்சித்து வருகிறார்கள் இரு தரப்பினரும். இந்த சூழலில், பொன்னையனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, “எந்த கட்சித் தலைவரும் அவரவர் கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வகையில், அ.தி.மு.க. நிர்வாகி பொன்னையனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க. முதல்நிலையில்தான் இருக்க வேண்டும்
என்பது அவரது ஆசை. இதில் பா.ஜ.க.வின் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை. அதேசமயம், 2024-ம் ஆண்டு மடைதிறந்த வெள்ளம் போல் பா.ஜ.க.வின் வளர்ச்சி தமிழகத்தில் இருப்பது உறுதி. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி 25 எம்.பி.க்களை கொண்டு செல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it