ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்களும், தற்கொலைப் படைத் தாக்குதலும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, தலைநகர் காபூலை குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காபூலிலுள்ள முக்கிய சாலையில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் தொழுகைக்காக கூடியிருந்த இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அதேமாதம் காபூல் நகரிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை ஹெராத் நகரிலுள்ள மசூதிக்கு தொழுகைக்காக வந்து கொண்டிருந்த தாலிபான்களின் முக்கிய மதகுருக்களில் ஒருவரான முஜிபுர் ரஹ்மான் அன்சாரியை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில்தான், நேற்றும் தலைநகர் காபூலில் மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. காபூலிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே நேற்று காலை 11 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 2 ரஷ்ய அதிகாரிகள் மற்றும் விசா பெறுவதற்காக தூதரகத்திற்கு வெளியே காத்திருந்த 18 பேர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதாவது, ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு நபர் சுற்றித் திரிந்திருக்கிறார். இதனால், உஷாரான பாதுகாவலர்கள் அந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். உடனே, அந்த பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்திருக்கிறான். ஆப்கானிஸ்தானில் இது மாதிரி தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.