ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலுள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில், முக்கிய இமாம் உட்பட 50 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக, சமீபகாலமாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டம் மவ்லவி செகந்தர் மசூதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 33 பேர் உயிரிழந்தனர். பிறகு, ஜூன் மாதம் காபூல் நகரிலுள்ள புகழ்பெற்ற சீக்கியர்களின் கார்டே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில், ஒரு சீக்கியர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 29-ம் தேதி காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 7-ம் தேதி காபூல் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில்தான், நேற்று தலைநகர் காபூலில் கைர்கானே என்கிற பகுதியில் உள்ள சித்திக்யா மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதில், முக்கிய இமாம்களில் ஒருவரான மௌலவி அமீர் முகமது காபூலி உட்பட 50 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 குழந்தைகள் உட்பட 27 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பஞ்சஷிர் மற்றும் வடக்கு ஆப்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமிய சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஷியா சமூகத்தினரை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரியவந்திருக்கிறது.