ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் தாலிபான் ஆட்சியாளர்கள். இதனால், அந்நாட்டு மக்கள் எப்படியாவது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். இந்த சூழலில், ஆப்கானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ. தொலைவில் சுமார் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி சுமார் 500 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவராண உதவிகள் அனுப்பப்பட்டிருப்பதாக தலிபான் அரசு தெரிவித்திருக்கிறது.