குருத்வாராவில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

குருத்வாராவில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

Share it if you like it

ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாரா ஆலயத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் ஷியா, சன்னி, அகமதியா உள்ளிட்ட பல்வேறு தரப்பு முஸ்லீம்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினரை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், ஆப்கனில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாரா ஆலயம் அமைந்திருக்கிறது. குறிப்பாக, இக்கோயிலில் சனிக்கிழமை விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது. ஆகவே, சனிக்கிழமைதோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், இன்று சனிக்கிழமை என்பதால் இக்கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்த சூழலில், மதியம் சுமார் 1.30 மணியளவில் குருத்வாரா பகுதியில் வந்து கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், குருத்வாரா கோயிலின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது. மேலும், அப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்தன. இச்சம்பவத்தில் அப்பகுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும், கோயில் இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், காரில் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவரை எந்த அமைப்பும் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Share it if you like it