டி.வி.யில் பெண்கள் முகத்தைக் காட்டக் கூடாது: தாலிபான்கள் அதிரடி!

டி.வி.யில் பெண்கள் முகத்தைக் காட்டக் கூடாது: தாலிபான்கள் அதிரடி!

Share it if you like it

ஆஃப்கானிஸ்தானில் இயங்கிவரும் தொலைக்காட்சி சேனல்களில் பங்குபெறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் முகத்தை மூடி இருக்க வேண்டும். கண்கள் மட்டுமே வெளியில் தெரிய வேண்டும் என்று தாலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஃப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரையிலான தாலிபான்களின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. உதாரணமாக, பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதோடு, உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான நீல நிற புர்காவை உடுத்த வேண்டும். பெண்கள் தனியாக எங்கும் செல்லக் கூடாது என்பன போன்ற ஏராளமான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்திருந்தனர். இதை மதிக்காதவர்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கினார்கள். இந்த சூழலில், 2001-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தகர்த்தனர் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர். இந்த அமைப்பின் தலைவன் பின்லேடனுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபான்களை ஓட ஓட விரட்டியடித்தது.

இதன் பிறகு, ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மீண்டும் கிடைக்கத் தொடங்கியது. மேலும், விருப்பப்பட்டவர்கள் மட்டும் புர்கா போன்ற உடைகளை அணிந்தனர். குறிப்பாக, காபூல் போன்ற நகரங்களில் பெண்கள் புர்கா அணிவதில்லை. இப்படி அனைத்து உரிமைகளும் தங்களுக்கு கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த சூழலில், 2021-ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அப்போது பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே தாலிபான்கள் தங்களது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள்.

முதலில் பெண்கள் கல்வி கற்கும் உரிமையைப் பறித்தனர். தொடர்ந்து, பெண்கள் அனைவரும் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் புர்காவும், முகம் தெரியாத அளவுக்கு ஹிஜாப்பும் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தனர். பின்னர், பெண்கள் தனியாக எங்கும் செல்லக் கூடாது, ஆண்களுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டனர். இதன் பிறகு, வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண்கள், அரைகுறை ஆடைகளை அணிவதாகக் கூறி, அத்தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்தனர். தற்போது, உள்நாட்டு தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் உடல் முழுவதுையும் மறைக்கும் வகையில் புர்காவை கண்டிப்பாக அணிய வேண்டும். அதேபோல, கண்கள் மட்டும் தெரியும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இது தொடர்ந்து, தாலிபான்கள் தலைவர்கள் பலரும், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்களையும் சந்தித்து பேசியிருப்பதாகவும், இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் தலிபான் அறம் மற்றும் துணை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அகிஃப் மஹஜர் கூறியிருக்கிறார். மேலும், முகத்தை மறைப்பதற்கான கடைசி தேதி மே 21 என்றும், புதிய உத்தரவு இறுதியானது என்றும் கூறியருக்கிறார். இதற்கு, தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் மட்டுமல்லாத ஆஃப்கானிஸ்தான் நாட்டின் பெண்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். எனினும், சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த உத்தரவை நேற்று முதலே அமல்படுத்தத் தொடங்கி விட்டன. பெரும்பாலான தொலைக்காட்சிகளில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண் தொகுப்பாளர்கள் அனைவரும் புர்காவும், ஹிஜாப்பும் அணிந்திருந்தனர். ஆக, ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்களின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது.


Share it if you like it