ஆண் துணை இல்லாமல் பெண்கள் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என்று தாலிபான்கள் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றி இருக்கிறார்கள். தாலிபான்களை பொறுத்தவரை, இஸ்லாமிய மத நம்பிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். எனவே, பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனால், கடந்த ஜனநாயக ஆட்சியில் பெண்கள் கல்வி கற்று வந்தனர். ஆகவே, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதும், சமீபத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடிவிட்டனர். இந்த சூழலில்தான், ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளிநாட்டு விமானங்களில் செல்ல அனுமதிக்க முடியாது என்று அறிவித்திருக்கின்றனர்.
அதாவது, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க மாணவிகள் முடிவு செய்தனர். இதற்காக, ஏராளமான மாணவிகள் காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றனர். ஆனால், அம்மாணவிகள் விமானப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று விமான நிறுவன அதிகாரிகளுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் விமானப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தாலிபான்கள் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தாலிபான்களுக்கு பயந்து முகம் மறைத்துப் பேசிய விமான நிலைய அதிகாரிகள் சிலர், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஏறுவதற்காக காபூலின் சர்வதேச விமான நிலையத்திற்கு டஜன் கணக்கான பெண்கள் வந்தனர். ஆனால், ஆண் பாதுகாவலர் இல்லாமல் அவர்கள் பயணம் செய்ய முடியாது என்று தாலிபான்கள் தரப்பிலிருந்து உத்தரவு வந்தது. இப்பெண்களில் சிலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள். மேலும், சிலர் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 45 மைல்களுக்குண் அதிகமாக பயணம் செய்யும் பெண்கள், ஆண் உறவினருடன் வர வேண்டும் என்று தாலிபான் தலைமையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தாலிபான்களின் இத்தகைய நடவடிக்கை அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.