கால் கடுக்க, பல மணி நேரம் நின்ற பிறகு, பட்டியலில் பெயர் இல்லை : மக்கள் வேதனை !

கால் கடுக்க, பல மணி நேரம் நின்ற பிறகு, பட்டியலில் பெயர் இல்லை : மக்கள் வேதனை !

Share it if you like it

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் இல்லை என்றும்,இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அரசுஅறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வட சென்னையில் அமுதம் மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கு நேற்று காலை 9 மணிக்கே பொதுமக்கள் வரத் தொடங்கினர். ஆனால், எல்லா கடைகளும் மூடிக் கிடந்ததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். காலை 11 மணிக்கு பிறகே டோக்கன் விநியோகம் தொடங்கியது. புதுப்பேட்டை, அயனாவரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ரேஷன் கடைகளிலேயே டோக்கன்கள் வழங்கப்பட்டன. சில இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தெருக்களுக்கு சென்று, ஒரு இடத்தில் அமர்ந்து டோக்கன்களை விநியோகித்தனர்.

அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர், பட்டியலில் தங்கள்பெயர் இடம்பெறாததை அறிந்து கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் போலீஸாரிடமும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் கூறும்போது, ‘‘அரசு தரப்பில் பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடைக்காரர்கள், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்குவதுதான் எளிதாக இருக்கும். அதை விடுத்து, கடையில் வைத்து கொடுப்பதால் எல்லோரும் டோக்கன் வாங்க வருகின்றனர். பட்டியலில் பெயர் இல்லாதவர்களை திருப்பி அனுப்பினால் அவர்கள் கோபப்படுவார்கள் என்பதை கடைக்காரர்கள் உணரவில்லை.

எனவே, பொதுமக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, யாருக்கு நிவாரணத் தொகை கிடைக்குமோ அந்த பயனாளியின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். நீண்ட வரிசையில் கால் கடுக்க, பல மணி நேரம் நின்ற பிறகு, பட்டியலில் பெயர் இல்லை என கூறுவது, வெள்ள பாதிப்பைவிட கடும் வலியை ஏற்படுத்துகிறது’’ என்றனர். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘குறைவான ஊழியர்களை கொண்டு, குறுகிய காலத்தில் வீடு வீடாகடோக்கன் வழங்குவது என்பது சாத்திய மில்லை. தூய்மைப் பணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை கொண்டுவந்தது போன்று, இதற்கும் கூட்டுறவு பணியாளர்களை அழைத்து வந்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக பொது விநியோகம் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இப்பிரச்சினை குறித்து எங்கள் கவனத்துக்கும் வந்துள்ளது, அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.


Share it if you like it