அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று (ஜூலை 2) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தவும், அதிக அளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையிலும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அக்னிபாத். இதன்படி, ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் 17.5 முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் சேரலாம். இத்திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும். இதில், முதல் 6 மாதங்கள் பயிற்சி காலமாகும். மேலும், முதல் 3 வருடங்களுக்கு மாதம்தோறும் 30,000 ரூபாயும், 4-வது ஆண்டு மாதம்தோறும் 40,000 ரூபாயும் சம்பளம் வழங்கப்படும். அதோடு, பணி முடிந்து திரும்பும்போது 12 லட்சம் ரூபாய் அக்னி வீரர்களின் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக செலுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கும் அதே சமயத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், தேச விரோதிகளும், அன்னிய கைக்கூலிகளும் அப்பாவி இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட வைத்தார்கள். ரயில் எரிப்பு, பஸ் எரிப்பு, கடைகள் சூறை என பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். இதனால், மத்திய மாநில அரசுகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கலவரக்காரர்கள் வலியுறுத்தினர். எனினும், திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்ட மத்திய அரசு, முதல்கட்டமாக விமானப்படை வீரர்கள் தேர்வுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி, ஜூன் 24-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை துவங்கியது. இதில், நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, ராணுவம், கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் பணிபுரிய ‘அக்னிபாத்’ என்ற திட்டம் கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதலில் 17 முதல் 21 வயதுவரை என்று அறிவிக்கப்பட்ட திட்டம், பின்னர் 17.5 வயது முதல் 21 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலில் இந்திய விமானப்படையில் ஜூன் 24-ம் தேதி முதல் ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது. இதில், நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.