அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவலை பரப்பிய 35 வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்திருக்கிறது.
இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும், அதிக அளவிலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், “அக்னிபாத்” என்கிற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால், இத்திட்டத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல், சில தேச விரோத சக்திகளின் தூண்டுதலினால் போராட்டம், வன்முறை என பொதுச் சொத்துக்களை சூறையாடி வருகிறார்கள் இளைஞர்கள். அதேசமயம், இளைஞர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்னிபாத் திட்டம் முடிந்து வெளியே வரும் இளைஞர்களுக்கு மாநில காவல்துறை, துணை ராணுவப்படை மற்றும் தொழில் தொடங்க கடனுதவி என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டம் குறித்து சிலர் பொய்யான தகவலை பரப்பி இளைஞர்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டி விட்டு வருகின்றனர். ஆகவே, இவ்வாறு பொய்த் தகவல் பரப்பிய 35 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்திருக்கிறது. மேலும், பொய்யான தகவல் பரப்பியதாக 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும், ராணுவத்தில் சேர ஒழுக்கம் அவசியம் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்திருக்கிறார். மேலும், அக்னிபாத் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது என்றும், விரைவில் ஆட்களை சேர்க்கும் பணி தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.