அக்னிபத் – இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டமா?
“அக்னிபத்” என்னும் இளைஞர்களுக்கான ஓரு புதிய திட்டத்தை, மத்திய அரசாங்கம் ஜூன் மாதம் 14 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தியது. 17 1/2 வயது முதல் 21 வயது வரை பணிபுரிய வேண்டும் என்ற விதியை உருவாக்கியது. பின்னர், அதிகபட்ச வயது வரம்பு இரண்டு வருடங்கள் உயர்த்தப் பட்டு, 23 வயது என திட்டமிடப் பட்டது.
இந்தத் திட்டம் உருவான நாள் முதலே, பலரும் வரவேற்ற சூழ்நிலையில், சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ரயில் பெட்டி (Train) எரிக்கப்பட்டு வருவது, மிகவும் வேதனையாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப் படுவதுடன், சொல்ல முடியாத இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். நமது நாட்டின் பொது சொத்து சேதப்படுத்தப் படுவதால், பலரும் துயரத்தில் மூழ்கி உள்ளனர். மக்களுக்கு அதிர்ச்சியைத் தருவதுடன், ஆட்சியாளர்களுக்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள சிக்கலானதொரு சூழ்நிலையை உண்டாக்குகின்றது.
ஆய்வு அறிக்கை :
2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை, 10 லட்சம் மக்கள் தொகையில், எத்தனை பேர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர் என்ற ஒரு ஆய்வை, எல்லா மாநிலங்களிலும், பிரபல நிறுவனம் ஒன்று எடுத்தது. அதில், அதிகபட்சமாக இமாச்சல் பிரதேசத்தில், பத்து லட்சம் பேரில் இருந்து, சராசரியாக 402 பேர் ராணுவத்தில் சேருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்டில் இருந்து 271 பேரும், சிக்கிமில் இருந்து 190 பேரும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 185 பேரும், பஞ்சாப்பில் இருந்து 174 பேரும், மிசோரமில் இருந்து 139 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 127 பேரும், ஹரியானாவில் இருந்து 122 பேரும், மணிப்பூரில் இருந்து 104 பேர் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
பீகாரில் இருந்து 22 பேர் மட்டுமே, தெலுங்கானாவில் இருந்து 17 பேர் மட்டுமே, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 23 பேர் மட்டுமே என அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
அகில இந்திய அளவில், 10 லட்சம் பேர் மக்கள் தொகைக்கு 37 பேர் மட்டுமே, ராணுவத்தில் சேருகின்றனர் எனவும், அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
கலவரத்தைத் தூண்டுவது யார்? :
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த “ஈஸ்ட் கோஸ்ட் ரயில்” கலவரக்காரர்களால் எரிக்கப் பட்டது. மேலும், ரயில் நிலையத்தில் அமைந்து உள்ள கடைகள், உணவகங்கள் போன்ற பல கடைகளை, கலவரம் செய்தவர்கள் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர். இதனால் ரயில்வே துறைக்கு, 12 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 52 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டனர். அதில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கம்பம் பகுதியில் அமைந்து இருக்கும், ஓரு ராணுவ பயிற்சி அகாடமியில் இருந்து, மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப் பட்டு, அந்த மாணவர்களை தூண்டி விட்டு, அதன் மூலமாக ரயில் எரிப்பு சம்பவம் நடத்தப் பட்டதாக, அந்த பயிற்சி மையத்தின் தலைவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதனால் அவரை, மத்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளதாகவும், பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளன.
ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 52 பேரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தங்கள் பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள் எனவும், யாரோ தூண்டி விட்டு தான் இப்படி செய்கின்றனர் எனவும், தூண்டி விடுபவர்களை முதலில் கைது செய்யுங்கள் என கண்ணீருடன் கூறி உள்ளனர்.
பீகாரில் 7 – 8 ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து, வாட்ஸப் மூலம் குழுக்கள் உருவாக்கப்பட்டு, செய்திகள் பகிரப்பட்டு, கலவரம் தூண்டப் பட்டது எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட 170 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டது. தானாபூர் ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக, இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உத்திரப்பிரதேசம், ஹரியானா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், சில இடங்களில் போராட்டம் நடத்தப் பட்டது.
ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை :
ஜூன் 19, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும், 483 ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர்.
இதுவரை, 602 ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டதாகவும், 10 ரயில் சேவைகளின் பயணம் தூரம் குறைக்கப் பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது,
இதில் மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டது – கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகம். 350க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வட கிழக்கு ரயில்வே நிர்வாகத்தின் 26 ரயில் சேவைகள் ரத்து செய்யப் பட்டது. பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப் பட்டதுடன், மாற்றுப் பாதையில் சென்று வருகிறது.
பாதிப்புக்கு உள்ளாகும் பொது மக்கள் :
திடீரென கலவரம் நடைபெறுவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பது கூட தெரியாமல், பலரும் ஆர்ப்பாட்டம் செய்வது அதிர்ச்சியாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து, தடுத்து நிறுத்த வேண்டிய அரசியல் கட்சிகளோ, ஏன் தடுக்க முற்படவில்லை? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொலைத் தூரத்திற்கு சென்ற எளிய மக்களுக்கு, ஊருக்கு திரும்பி வர, ரயில் சேவை மட்டுமே வசதியாக இருக்கும். வசதி படைத்தோர் விமானத்தில் செல்வார்கள். ஆனால், எளிய அப்பாவி மக்களுக்கு, ரயில் சேவை மட்டுமே வரப்பிரசாதமாக உள்ளது. குறைந்தக் கட்டணத்தில், நீண்ட தூரத்திற்கு செல்லும் ரயில் சேவைகள், திடீரென நிறுத்தப் படுவதால், பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரு இடத்தில் தங்குவதற்கு பணம் இல்லாமலும், தனது ஊருக்கு திரும்பி செல்ல மாற்றுப் பயணத்தில் செல்வதற்கு வழியும் தெரியாமலும், சொல்ல முடியாத துயரத்திற்கு அப்பாவி பொது மக்கள் ஆளாகி வருவது, பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்ணீரை வர வைக்கிறது.
இந்தத் திட்டத்திற்கு எதிராக, யாரேனும் எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், தங்களது வாகனத்தை தீக்கிரையாக்கி எதிர்ப்பு தெரிவிக்கலாமே! பொது சொத்துக்கு ஏன் அவர்கள் சேதம் விளைவிக்கிறார்கள் எனவும், சமூக ஆர்வலர்கள் கேள்வி தொடுத்து வருகின்றனர்.
வாய்ப்புகள் பல உண்டு :
அக்னிபத் திட்டத்தின் மூலமாக, நான்கு வருடங்கள் பயிற்சி முடித்து வந்தவுடன் துணை ராணுவம் உட்பட பல துறைகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மஹிந்திரா குரூப் நிறுவனம், பயோகான் லிமிடெட், ஆர்.பி.ஜி. என்டர்பிரைசஸ், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், டி.வி.எஸ். மோட்டார்ஸ் போன்ற பல நிறுவனங்கள் அக்னிபத் வீரர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என தெரிவித்து உள்ளனர்.
எனினும் இதற்கென ஏன் போராடுகிறார்கள்? என்பது புரியவில்லை. போராட்டக்காரர்களின் உருவத்தை உற்று நோக்கினால், அவர்கள் 17 1/2 வயது முதல் 23 வயது கொண்ட இளைஞர்களா? என்னும் சந்தேகம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் இந்த திட்டம்? :
இத்தகைய பயிற்சியின் காரணமாக, இளம் டீன் – ஏஜ் பருவத்திலேயே, தேசப்பணியில் ஈடுபடுவதன் மூலம், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள், தேசப் பக்தியுடனும், நேர்மறை சிந்தனையுடனும், சுயக் கட்டுப்பாடுடனும், நல்ல பழக்க வழக்கங்களுடன் திகழ்வார்கள் என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து, உலகிற்கு அனுப்பி வைத்த நமது நாட்டின் பெருமையை, பலரும் பேசி வரும் இந்த நேரத்தில், சிலரின் போராட்டங்கள் மூலமாக, நமது மாண்பு உலக அளவில் குறையும் என்பதே நிதர்சனமான உண்மை. வேலியே பயிரை மேய்வதுப் போல, பிரச்சினைகளை சரி செய்ய வேண்டிய பெரியவர்களே, கலவரக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது.
போராட்டத்தைக் கைவிட்டு…
நல்ல வழியில் சென்று…
நம்முடைய நாட்டை செம்மையாக்க…
அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது…
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
உதவிய தளங்கள் :