அக்னிபாத் திட்டத்துக்கு சமூக விரோதிகள் எதிர்ப்புத் தெரிவித்து பீகாரில் ரயிலையும், ரயில் நிலையத்தையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் குறுகிய கால மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வுபெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும். இதில், குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தங்களது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இதுவே இந்திய ராணுவத்தில் தற்போதுவரை பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்தது..
இந்த சூழலில், இந்திய ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் ‘அக்னிபாத்’ என்கிற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. இத்திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இத்திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதன்படி, இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் 4 வருடம் வரை ராணுவத்தில் பணிபுரியலாம். இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு மேலும் 15 வருடங்களுக்கு பணி வழங்கப்படும்.
இந்த நிலையில்தான், இளைஞர்களுக்கு பயனளிக்கக் கூடிய அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பீகாரில் சமூக விரோதிகள் இன்று கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சரண் மாவட்டத்தில் சாப்ரா என்கிற இடத்தில் ரயிலுக்கு தீவைத்த கும்பல், ரயில் நிலையங்களில் இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் தீவைத்தது. மேலும், சாலையிலும் டயர்கள் மற்றும் பொருட்களை போட்டு தீவைத்து கொளுத்தியது. அதோடு, அவ்வழியாக வந்த ரயில்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் சமூக விரோத கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது.