கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (மார்ச் 1) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் மீதுசொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபு , அவரது அப்பா ஐயப்பா, விழுப்புரத்தில் உள்ள அவரது சகோதரி வசந்தி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளநிலையில், இப்போது பிரபு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பத்து ரூபாய் இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓம் பிரகாஷ்சென்னை உயர் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்று வழக்குதொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி இன்று சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் எம் எல் ஏ பிரபு அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து , மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடதக்கது.