பஹ்ரைனில் இருந்து தங்கம் கடத்தல்: ஏர் இண்டியா விமான ஊழியர் ஷபி கைது!

பஹ்ரைனில் இருந்து தங்கம் கடத்தல்: ஏர் இண்டியா விமான ஊழியர் ஷபி கைது!

Share it if you like it

பஹ்ரைன் நாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த ஏர் இண்டியா விமான நிறுவன ஊழியர் ஷபி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஹ்ரைன் நாட்டிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஏர் இண்டியா விமானம் கிளம்பியது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொச்சி வந்தடைந்த அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால், இந்த சோதனையில் யாரும் தங்கத்துடன் சிக்கவில்லை. இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே. விமான நிறுவன ஊழியர்களை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது விமானத்தின் கேபின் ஊழியராக பணிபுரியும் ஒருவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே, அந்த நபரை பின்தொடர்ந்தனர். அவர், விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். இதை கண்ட அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். முதலில் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் தங்கம் எதுவும் இல்லை. எனவே, அவரது உடல் முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதிலும் ஒன்றும் தெரியவில்லை.

இதையடுத்து, அவரது சட்டையை அதிகாரிகள் அகற்றச் சொன்னார்கள். அப்போது, அந்த ஊழியரின் 2 கைகளிலும் தங்க பசை ஒட்டப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த பசையை அகற்றி சோதனை செய்ததில் 1.50 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ஊழியரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அந்த ஊழியரிடம் நடத்திய விசாரணையில், அவர் வயநாட்டைச் சேர்ந்த ஷபி என்பது தெரியவந்தது. இவர் யாருக்காக தங்கம் கடத்தி வந்தார், இதுதான் முதல் முறையா அல்லது இதற்கு முன்பும் இதுபோல கடத்தி வந்திருக்கிறாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it