கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் சார்பில், மதுரையில் ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டது. பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட நிலை என்ன என்பது குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு செய்தனர்.
சென்னை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில், 38.5 லட்சம் கைம்பெண்கள் உள்ளதாகவும் இவர்களில் 38 சதவிகிதம் பேரின் கணவர்கள் போதையில் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வானது, 21 வயது முதல் 35 வயது வரை 24.4 சதவீதமும் 36 வயது முதல் 50 வயது பெண்களிடம் 56.56 சதவீதமும், 51 வயதிற்கு மேல் 19 சதவீதம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு சாதி மற்றும் மதங்களை சேர்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில்
38 % பெண்கள் மதுபோதை, மதுபானம் காரணமாக கணவனை இழந்து விதவைகளாக இருப்பதும்
34.5% பெண்கள் வியாதியின் காரணமாக தங்கள் கணவனை இழந்து ஆதரவற்று இருப்பதும்
13.5% சாலை விபத்துக்களால் கணவனை இழந்து கைம்பெண்களாக இருப்பதாகவும்
6.1 % தற்கொலை காரணங்களால் கணவனை இழந்து இருப்பதும்
3 % பிற காரணங்களால் கணவனை இழந்து இருப்பதும்
2.4 % கஞ்சா போன்ற போதை மருந்துகள் காரணமாக கணவனை இழந்து இருப்பதும்
1.8 % கொலை காரணமாக கணவனை இழந்து இருப்பதும்
0.6 % கொரோனா காரணமாக கணவனை இழந்து இருப்பதும்
தெரியவந்துள்ளது.