“என் மண் என் மக்கள்” யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- வேலால் பகை முடிக்க வந்த முருகப் பெருமான், நிலம், கடல், ஆகாயம் ஆகிய மூன்றிலும் சூரபத்மனை வெற்றி கொண்டார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் நின்றும், திருச்செந்துாரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப் பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று போர் புரிந்த தலமான திருப்போரூரிலும், எல்லா வரமும் கொடுக்கும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் பல்லாவரம் சட்டசபைத் தொகுதியிலும், ஊழல் அசுரனை அழிக்கும் யாத்திரையாக, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடக்கிறது.
மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்குத் தேவையான 222.49 ஏக்கர் நிலத்தை, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2020 நவம்பரில் தமிழக பங்காளி அரசு ஒப்படைத்தது.
நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதால், கட்டுமானப் பணிகளின் மொத்த மதிப்பு 700 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இந்தியாவில் எந்த ஊரிலும் இல்லாத தாமதம், தமிழகத்தில் மட்டும் ஏன் என்றால், இங்கு ஒரு சிறிய சுரங்கப் பாதை கட்ட, 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆமை வேகத்தில் பங்காளி கட்சிகளின் பங்களிப்பு இருப்பதால், தமிழக அரசு தத்தளிக்கிறது.
கேள்விக்கு என்ன பதில்?
பெயரை மட்டும் மாற்றி, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை தங்கள் திட்டங்களுக்கு சூட்டும் தமிழக அரசு, எல்லா திட்டங்களையும் மத்திய அரசுப் பணத்தை வைத்து நிறைவேற்றுகிறது என்றால், மாநில அரசுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே என்ற கேள்விக்கு என்ன பதில்?
தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கூறிய, சமையல் எரிவாயு மானியமாக, ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய்
நுாறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம்
கல்விக் கடன் ரத்து
கொரோனா தொற்று காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை, மீண்டும் இயங்க வைக்க எளிய தவணைகளில் கடன் வசதி
நெல்லுக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாய்; கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை 4,000 ரூபாயாக உயர்த்துதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு
மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள்
பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம்
மாதம் ஒரு முறை மின் கட்டணம் என, தி.மு.க., அள்ளிவிட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பல்லாவரம் தொகுதியைப் பொறுத்தவரை, அமைச்சர் அன்பரசன் அணி, எம்.எல்.ஏ., கருணாநிதி அணி, தாம்பரம் மேயர் அணி எனப் பிரித்து, ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மக்களை சுரண்டுகின்றனர்.
திருநீர்மலை ஏரியில் மணல் அள்ளுவது உள்ளிட்ட, இவர்கள் செய்யும் அனைத்து முறைகேடுகளும் அடுத்த ‘தி.மு.க., கோப்பு’களில் வெளிவரும்.
தமிழகத்தில் வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த தி.மு.க., அரசு, டாஸ்மாக் சாராயத்துக்கு தடை விதிக்காது. காரணம், டாஸ்மாக்கிற்கு சாராயம் வழங்குவது, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., டி.ஆர்.பாலுவின் சாராய ஆலை தான்.
தொகுதிக்கு எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளாமல், தன் குடும்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார் பாலு.
வரும் லோக்சபா தேர்தலில், குஜராத், டில்லி, பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., தான் வெற்றி பெறும். அங்குள்ள மக்கள், வளர்ச்சியை கண்முன்னே பார்க்கின்றனர்; தொடர்ந்து வளர்ச்சிக்காக ஓட்டளிக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் 2014 – 2024 பத்தாண்டு காலகட்டங்களில் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளிக் கட்சிகள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக பார்லிமென்டில் பேசியதுகூட கிடையாது. எனவே, திராவிட பங்காளிக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பது வீண்.
கடந்த 2019ல், மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை அழைத்து வந்து பேச்சு நடத்தினார் பிரதமர் மோடி.
டில்லிக்கோ, தன் சொந்த மாநிலம் குஜராத்திற்கோ அல்லது தன் சொந்த தொகுதி வாரணாசிக்கோ அழைத்துச் செல்லாமல், தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதற்காக, மாமல்லபுரத்தை தேர்வு செய்தார்.
கட்டப் பஞ்சாயத்து செய்து வசூல் செய்வதற்காகவே, ஒரு கட்சியின் எம்.எல்.ஏ., திருப்போரூர் தொகுதியில் இருக்கிறார்.
‘சட்டம் – ஒழுங்கு, காவல் துறை தலைமை இயக்குனர் கையில் இல்லை. இங்கே இருக்கும் வி.சி.,க்கள் கையில் இருக்கிறது’ என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளுக்கு சொந்தக்காரர் தான், தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி.
இவர்கள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் தாமரை மலர்ந்தாக வேண்டும்.