‘தேசத்தின் பிதா’: மோகன் பாகவத்தை புகழ்ந்த தலைமை இமாம்!

‘தேசத்தின் பிதா’: மோகன் பாகவத்தை புகழ்ந்த தலைமை இமாம்!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ‘தேசத்தின் தந்தை’ என்று இமாம் அமைப்பின் தலைவர் பாராட்டி இருப்பது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, டெல்லியிலுள்ள அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை டெல்லி கஸ்துாரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதிக்குச் சென்று இமாம் இலியாசியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. பின்னர், வடக்கு டெல்லியில் ஆசாத்பூர் என்கிற இடத்தில் இருக்கும் முஸ்லிம் மதக் கல்வியை போதிக்கும் மதரஸாவுக்கும் மோகன் பாகவத் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மோகன் பாகவத் விசிட் குறித்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “மதரசாவில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது மோகன் பாகவத்தை ‘ராஷ்ட்ர பிதா’, அதாவது தேசத்தின் தந்தை என்று இமாம் பாராட்டினார். ஆனால், மோகன் பாகவத்தோ, ‘தேசத்தின் தந்தை ஒருவரே. நாம் அனைவரும் இந்த தேசத்தின் குழந்தைகள்’ என்றார். மேலும், ‘நமது நாட்டின் பெருமைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும், அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும்’ என்று மாணவர்களிடம் கூறினார். மோகன் பாகவத் மதரஸாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை” என்று கூறினார்.

இது குறித்து, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி கூறுகையில், “மோகன் பாகவத் ராஷ்ட்ர பிதா. நமது நாட்டை பலப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசினோம். எனது அழைப்பை ஏற்று மதரஸாவுக்கும், மசூதிக்கும் மோகன் பாகவத் வந்தார். இந்த வருகையின் வாயிலாக, நாட்டை பலப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற செய்தியை அவர் தெரியப்படுத்தி இருக்கிறார். நம் அனைவருக்கும் நாடுதான் முதன்மையானது. மதமும், வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும், நம் அனைவருக்கும் ஒரே மரபணுதான்” என்றார்.

இந்த சந்திப்பின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துடன், நிர்வாகிகள் கிருஷ்ணகோபால், ராம் லால், இந்திரேஷ் குமார் ஆகியோரும் இருந்தனர்.


Share it if you like it