அற்புதமான அயோத்யா புனித யாத்திரை: வாழ்நாள் பாக்கியம். ஆஸ்தா சிறப்பு ரயில் மூலமாக சென்னை தாம்பரம் – அயோத்தி வரை சிறப்பு ஏற்பாடுகள். சங்க குடும்பத்துடன் சேர்ந்து புனித பயணம், மட்டற்ற மகிழ்ச்சி. 19/2/2024 அதிகாலை முதல் 24/2/2024 காலை வரை ஆறு நாட்கள் அயோத்யா பயணம். சிறப்பு ரயில் முழுவதும் ராம பக்தர்கள். ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.
இந்தியன் ரயில்வே: முதலில் மத்திய அரசுக்கும் ரயில்வே துறை அமைச்சகத்திற்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். பொதுவாக ஹஜ் பயணத்திற்கு கொடுக்கும் மானியம் முக்கியத்துவம், இந்துக்களுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இந்துக்கள் புனித யாத்திரைக்கும் குறைந்த கட்டணத்தில் மிக சிறப்பாக ஆஸ்தா ரயில்கள் அயோத்திக்கு ஏற்பாடு செய்த மோடி அரசாங்கத்திற்கு ஓரு ராயல் சல்யூட். நாள்தோறும் 25 ஆஸ்தா ரயில்கள் நாடு முழுவதிலுமிருந்து அயோத்திக்கு இயக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ராம பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர் ரயில்வே துறை IRCTC. பதிவு செய்த பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து, தங்களது ரயில் பயண அட்டையை பெற்றுக்கொள்ள, கோச்சுக்கு ஓரு கவுண்டர். 20 பெட்டிகளில் சுமார் 1000ம் ராம பக்தர்கள் பயணம். அதிகாலை 3.45மணிக்கு புறப்படும் ரயில், அதற்காக இரவு முதல் கண்விழித்து உதவிய ஏராளமான ரயில்வே ஊழியர்கள். இதுவரை இதுபோல் கண்டதில்லை. மேலும் அதிர்ச்சி, ஆமாங்க இன்ப அதிர்ச்சி பல காத்துக்கொண்டு இருந்தது. வெல்கம் கிட் வேற.
பொதுவாக சிறப்பு ரயில் என்றால் பராமரிப்பு இருக்காது. கிழிந்த சீட், கொமட்டும் கழிவறை, குப்பைகள், கரப்பான் பூச்சிகள். இதுவும் அப்படிதான் இருக்குமோ என்ற பயத்தில் வண்டியில் எரிய பக்தர்களுக்கு காத்திருந்தது அந்த இன்ப அதிர்ச்சி. புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட ரயில் பெட்டி, சுத்தமாக துவைத்து வைக்கப்பட்டிருந்த தலையணை போர்வை விரிப்பு, குப்பைகளோ பூச்சிகளோ தென்படவில்லை. கழிவறை பார்த்து மேலும் அதிர்ச்சி. கீழே கார்பெட், டெட்டால், புதிய கண்ணாடிகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட். மிகவும் அருமையான ஏற்பாடு. நம்பமுடியவில்லை.
அதுசரி, ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும், போகப்போக நாறிப்போகும் என்பது பத்து வருஷம் முன்பு இருந்த நிலை. ஆனால் தற்போது முழுவதும் மாறிவிட்டது. ரயில் பயணத்தில் ஓரு பெரிய துப்புரவு தூய்மையாளர் குழு நம்முடன் இருந்தார்கள். 4 மணி நேரத்திற்கு ஓரு முறை கம்பார்ட்மெண்ட், கழிவறை சுத்தம் செய்வது, பெரிய நிறுத்தங்களில் கழிவறைக்கு தேவையான தண்ணீர் நிரப்புவது என்று ஆறு நாட்களும் மிகவும் தூய்மையாக சுத்தமாக வைத்திருந்தனர். நீண்ட ரயில் பயணம் என்ற கவலை பறந்து போய்விட்டது.
பாதுகாப்பு: பயணம் முழுவதும் 24 மணி நேரமும் நம்முடன் 10 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய RPF காவலர்கள் ரயிலில் பயணம் செய்தனர். இத்தகைய பாதுகாப்பு எதற்கு என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. கோத்ரா சம்பவம் நினைவிற்கு வந்தது. காவலர்கள் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று கதவுகள் பூட்டப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்தனர். ரயில் நிற்கும் நிலையங்களில் அவர்கள் நடைமேடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். வெளிநபர்கள் யாரேனும் ரயிலில் ஏறாதவாறு பார்த்துக்கொண்டனர். அதே சமயத்தில் ராம பக்தர்கள் தங்கள் அடையாள அட்டை அணிந்துக்கொண்டு, ரயில் நிலையங்களில் தேவையான உணவு பண்டங்கள் வாங்குவதற்கு அனுமதித்தனர். மிகவும் நட்புடன் மரியாதையாக, இனிமையாக பழகினர். குறிப்பாக ஒரு சம்பவம். அயோத்தியிலிருந்து திரும்பும் போது, ராம பக்தர்கள் அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்களுக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் அங்கு இருந்த ஒரு காவல் அதிகாரி கண்கள் கலங்கி ஆனந்த கண்ணீர் பெருகியது மனதை கவர்ந்தது. அவர்கள் எதிர்பார்ப்பது இந்த அன்பும் அக்கறையும் தான். மேலும் அனைத்து இடங்களிலும் காவலர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று நம்மை வாழ்த்தியது, மனமகிழ்ச்சி கொடுத்தது.
ரயிலில் உணவு: குறை சொல்வதற்கில்லை. பெரும்பாலும் நேரத்திற்கு கொடுக்கப்பட்டது. IRCTC ஏற்பாடு. மூன்று வேலைகள் உணவு மற்றும் இடையில் தேநீர், தின்பண்டங்கள். சில நேரத்தில் ரயில் தாமதமாக சென்றதால் உணவு அந்த நிலையங்களில் ஏற்றுவதற்கு தாமதமானது. குறிப்பாக மகாராஷ்டிரா வரை சிறப்பாக இருந்தது. ஆனால் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலத்தில், உணவு சற்று சுமார்தான். காரணம் நாம் தமிழகத்தில் இருந்து வந்ததால் என்னமோ, அவர்கள் கலவை சாதம் என்று முடிவு செய்து சற்று சொதப்பி விட்டனர். அவர்கள் உணவு வகைகள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் குறையில்லை. ராம் லல்லா தரிசனம் பிரதானம், ஆகையால் பெரிதாக தெரியவில்லை. மேலும் நம் சங்க கார்யகர்தர்கள் நம்மை சிறப்பாக பார்த்துக்கொண்டனர்.
ராம பக்தியில் மூழ்கிய ஆஸ்தா ரயில்: எங்கும் ராம நாமம். விண்ணை பிளக்கும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம். ரயில் பயணம் முழுவதும் அனைத்து பெட்டிகளிலும் பஜனைகள், பக்தி பாடல்கள், சங்க பாடல்கள். குழந்தை முதல் பெரியவர்கள் முதல் உற்சாக ஆட்டம் பாட்டம். பெரியவர்கள் புத்தகங்களில் ராம நாமத்தை எழுதிக்கொண்டே பயணம் செய்தனர். ஆங்காங்கே கரசேவகர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். ஆறு நாட்களும் உற்சாகம். மாலை பொழுதில் அனைத்து பெட்டிகளிலும் சங்க பிரார்த்தனை. சில பெட்டிகளில் குழுக்களாக ரயில் நிலைய நடைமேடையில் பிரார்த்தனா பாடியது மறக்கமுடியாத அனுபவம். அதிக நேரம் நிற்கும் ரயில் நிலையங்களில், ராம பக்தர்கள் கீழே இறங்கி, பக்தி பஜனைகள் செய்வதும், தேச பக்தி கோஷங்கள் போடுவதுமாக இருந்தனர். பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு. அவர்களும் நம்முடன் சேர்ந்துக்கொண்டனர்.
எழுச்சியை உருவாக்கிய ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை: பாரத தேசம் முழுவதுமாக மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்திருப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. ரயில் பயணத்தில் செல்லும் வழியெல்லாம் ராமர் காவி கொடி. ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் என்று அனைத்து கிராமங்கள், நகரங்களில், மக்கள் தங்கள் வீடுகளில் ராம காவி கொடி ஏற்றிவைத்திருப்பதை கண்டு ஆனந்தம் அடைந்தோம். வீடுகள் மட்டுமல்லாமல் வயல் வெளி நடுவில் காவிக்கொடி பட்டொளி வீசி பறந்தன.
சுவாரசியமான சம்பவம்: அயோத்யா செல்லும் வழியில், மகாராஷ்டிரா மாநிலம் பாலர்சா என்ற நகரத்தை கடக்கும் வேளையில், ஒரு ராம பக்தர் தனது கைபேசியை கீழே தவறவிட்டார். உடனடியாக தகவல் சென்னை ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்க, ஜோகோ நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் மூலமாக அந்த மொபைல் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேரம், காட்டுப்பகுதி. அந்த இடத்தை துல்லியமாக கண்டறிந்து, பாலர்சா ஆர்.எஸ்.எஸ். செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக RPF உதவியுடன் கைபேசி மீட்ட்கப்பட்டு, அயோத்தியிலிருந்து திரும்பும் வழியில், அந்த ராம பக்தரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய சுயநலமற்ற செயல்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் தான் சாத்தியம் என்று அனைவரும் போற்றி பாராட்டினர்.
ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர புறம்: 21ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அயோத்யா சென்றடைந்தோம். VHP அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஸ்ரீ ஸ்தாணுமாலையன் ஜி, தமிழக பாஜக மூத்த கார்யகர்த்தர் ஸ்ரீ கோபிநாத் ஜி மற்றும் பல கார்யகர்தர்கள், அந்த அதிகாலை வேளையில், கடும் குளிரையும் பொறுத்தப்படுத்தாமல், ராம பக்தர்களை ரயில் நிலையத்தில் காத்திருந்து வரவேற்றது, அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தது.
பிறகு சற்று நடை பயணம், தீர்த்த க்ஷேத்ர புறம் சென்றடைந்தோம். மிக பிரமாண்ட ஏற்பாடு வியக்க வைத்தது. 45 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தற்காலிக நகரம் என்றே சொல்லலாம். தங்குவதற்கு 6 பெரிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் பல கூடாரங்கள். கூடாரத்தில் குளிருக்கு இதமாக மெத்தை போர்வைகள். பெரியவர்களுக்கு கட்டில் ஏற்பாடு. ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியே கழிப்பிடங்கள், குளியல் இடம். அனைத்து பகுதிகளிலும் உணவு கூடங்கள். அனைத்து வகையான உணவுக்கும் ஏற்பாடு, தென்னிந்திய உணவு, ராஜஸ்தானி, பஞ்சாபி என்று தனித்தனியாக. தேநீர், காபி ஏற்பாடுகள். எப்போதும் தொண்டைக்கு இதமாக வெந்நீர். குளிப்பதற்கும் கூட சுட தண்ணீர். எப்பா என்ன பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. அதுவும் அந்த குளிரில். ஒரே நேரத்தில் ஏறத்தாழ 4000 பேர் தங்குவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடு.
மேலும் தீர்த்த க்ஷேத்ர புறத்தில், சத்ராபதி சிவாஜி மகாராஜ் திருவுருவப்படம் கொண்ட நினைவிடம், அமர் ஜவான் ஜ்யோதி மற்றும் 500 ஆண்டு காலம் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த 4 லட்சம் ராம பக்தர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, காவி த்வஜம் கொண்ட நினைவிடம். இவை அனைத்தும் மிக அற்புதமாக, நேர்த்தியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்யா தாம்: காசியை போல தொண்மையான நகரம். ராமாயணம் நடந்தது கிரேதா யுகம். பிறகு துவாபர யுகம் முடிந்து, தற்போது நடப்பது கலியுகம். பல்லாயிரம் ஆண்டுகள் முந்தைய புண்ய பூமி. ராமன் ஆட்சி செய்த நகரம். அயோத்தி முழுவதும் ஆயிரக்கணக்கில் வானர சேனைகள். ராமன் எங்கோ அங்கே ஹனுமான் மற்றும் வானரங்கள். குறுகிய தெருக்கள், சில பகுதிகள் தவிர. தற்போது உத்தர பிரதேசம் அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய அயோத்யா நகரம் உருவாக்க திட்டம். பல லட்சம் பக்தர்கள் வந்து ராமரை தரிசிக்க, தங்கும் விடுதிகள், அன்னதான கூடங்கள், போக்குவரத்து என்று நவீன வசதிகளுடன். சற்று காலம் பிடிக்கும். ஆனால் தற்போது உள்ள அயோத்யா நகரத்தில் அனைத்து வசதிகளும் யாத்ரிகர்களுக்கு சிறந்த முறையில் செய்துள்ளது அரசாங்கம். எங்கு செல்லவேண்டும் என்றாலும் மாசு இல்லாத எலக்ட்ரிக் ஆட்டோ கிடைக்கும். தங்குவதற்கு சத்திரங்கள் மற்றும் வசதியான ஹோட்டல்கள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு தற்போது ஏறத்தாழ 4 லட்சம் பக்தர்கள் ராம் லல்லாவை தரிசிக்க வந்துக்கொண்டு இருக்கின்றனர். பாதுகாப்பு மிக பெரிய சவால். Security Nightmare என்றே சொல்லலாம். உ.பி அரசு அயோத்யாவை தங்கள் பாதுகாப்பு வலயத்தில் கொண்டுவந்துள்ளது.
ஆஸ்தா ரயிலில் அயோத்யா சென்றடைந்த ராம பக்தர்கள், புனித நதி சரயு சென்று நீராடி, பின்பு முதலில் ஹனுமான் கர்ஹி சென்றோம். அயோத்யாவின் காவலன் ராம பக்த ஹனுமான். ஏராளமான கூட்டம். அயோத்தியில் திரும்பும் பக்கமெல்லாம் ராம பக்தர்கள், ராம நாம கோஷங்கள். கூடிருந்து குளிர்ந்தோம். பக்தர்கள் வெள்ளத்தில் சென்று ஹனுமனை தரிசித்தோம். அடுத்து என்ன? மனம் ஏங்கியது.. கால்கள் ஜென்ம பூமியை நோக்கி ஓடியது. சரயு நதிக்கரையில் நீராடுவதற்கு சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உடை மாற்றுவதற்கு அறைகள் உள்ளது.
ராம ஜென்ம பூமி; ராம் லல்லா தரிசனம்: எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். 500 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு, பல லட்ச உயிர் தியாகங்கள் கொடுத்து, ராமனை அவன் அவதரித்த இடத்தில் தரிசிக்க.. பிறவி பயன் பெற்றோம். ராமர் ஆலயத்திற்கு நுழையும் முன்பு, நமது காலணிகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மொபைல் மற்றும் மற்ற பொருட்ட்கள் பத்திரமாக வைக்க அதிகளவில் லாக்கர் வசதிகள் உள்ளது. கோயிலுக்குள் எந்த பொருளும் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. கட்டுமானம் முழுமையாக முடியவில்லை என்றாலும் Q system சிறப்பாக ஏற்படுத்தியுள்ளனர். அங்கே VIP Q என்றோ Special Ticket என்றோ ஒன்றும் கிடையாது. அனைவருக்கும் பொதுவான ஒரே வழி.
பிரமாண்டமான ஆலயம். பிரமிப்பூட்டும் சிற்ப கலைகள். அனைத்தையும் கவனித்தவாறு கோயில் வாயிலில் நுழைந்தோம். அன்றைய தினம் ராமனுடைய ஜென்ம நக்ஷத்திரம் புனர்பூசம். திரை மூடப்பட்டு இருந்தது. சற்று நேரம் ஒன்றும் புரிதவில்லை. சிறிது நேரம் கழித்து திரை விளக்கப்பட்டது. அற்புதமான காட்சி. தீபாராதனை ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கண்கள் கலங்கின. குழந்தை ராமர் கொள்ளை அழகு. காண கண்கோடி வேண்டும். மெய்மறந்து நின்றுவிட்டோம் காவலர்கள் எங்களை நகர்த்தும் வரை. குறிப்பாக அங்கே மரியாதையாக பக்தர்களை நடத்துகின்றனர். பிடித்து தள்ளுவதில்லை. அவமரியாதையாக பேசுவதில்லை. அனைத்திற்கும் மேலாக, ஏன் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டீர்கள் என்று ஆணவத்துடன் கேட்கவில்லை. ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் விண்ணை பிளந்தது. கண்டோம் எங்கள் ராமனை! மீட்டோம் எங்கள் ராம ஜென்ம பூமியை!! என்ற மனநிறைவுடன் ஆலயத்திலிருந்து வெளி வந்தோம். அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கப்படுகிறது.
தரிசனம் முடித்த ராம பக்தர்கள், மேலும் தசரத பவன், ராமர் மாளிகை கனக பவன், வால்மீகி பவனம் போன்ற புண்ய ஸ்தலங்களுக்கு சென்றனர். மாலை சரயு நதிக்கரையில் ஆர்த்தி நடைப்பெற்றது. முடித்துக்கொண்டு சரயு காட் சென்றோம். அங்கே கண்கவர் லேசர் ஷோ நடந்தது. மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடக்கிறது. மக்கள் கவலைகளை மறந்து ஆடி பாடி கொண்டாடுகின்றனர். இதுவல்லவோ அரசாங்கம். அற்புதமான சரயு காட் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. என்று தணியும் இந்த (திராவிட கட்சிகளிடம் இருந்து) சுதந்திர தாகம் என்ற ஏக்கம் ஒரு பக்கம். தமிழகத்தில் எண்ணற்ற புராதன கோயில்கள் இருக்கின்றன. ஆனால் சரிவர பராமரிப்பு இல்லை. ஆளும் வர்க்கத்திற்கு அக்கறை, உண்மையான பக்தி இல்லை. காசு ஒன்றே குறியாக இருந்தால் எப்படி உருப்படும் என்ற கவலையுடன் மீண்டும் தங்கும் கூடாரத்திற்கு திரும்பினோம்.
அயோத்தியிலிருந்து நன்றியுடன் விடைபெற்றோம்: மறுநாள் காலையில் மீண்டும் ஒரு முறை ராம் லல்லாவை தரிசனம் செய்து கிளம்புவதற்கு தயாரானோம். ரயில் நிலையம் சென்று மீண்டும் அவரர் பெட்டிகளில் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். சில விசயங்கள் மனதிற்கு பட்டது. முதலில் அயோத்தி மக்கள். என்னதான் அவர்கள் வாழ்வாதாரம் தற்போது அதிகரித்தாலும், கட்டுக்கடங்காத கூட்டம், தினசரி போக்குவரத்து நெரிசல், எங்கு சென்றாலும் பக்தர்கள் படையெடுப்பு, அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, ராம பக்தர்களை நல்ல முறையில் வரவேற்று, உபசரித்து, முகம் சுளிக்காமல் அவர்கள் நடந்துக்கொள்ளும் விதம் பாராட்டத்தக்கது. அயோத்யா நகர நிர்வாகம், காவல்துறை, உபி அரசாங்கம் இவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்த தருணத்தில் உயிர் தியாகம் செய்த கரசேவகர்களை, போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற ராம பக்தர்கள், தலைவர்கள், நீதிமன்றத்தில் வழக்காடி வென்றுக்கொடுத்த உத்தமர்கள் அனைவரையும் மனம் நினைத்தது. நெகிழ்ந்தது. நன்றி தெரிவித்தது. மனநிறைவுடன், மீண்டும் வரும் ஏக்கத்துடன், அயோத்தியிலிருந்து விடைபெற்றோம். சென்னை வந்தடைந்தோம்.
ஜெய் ஸ்ரீ ராம்!!
~ ஆனந்த் ஸ்ரீனிவாசன் ~
Thanks for sharing the ground reality. Only a trained RSS Karyakarta can merge with society selflessly.. AYODHYA , A destination for every Hindu.
தன்யன் ஆனேன். நன்றி.
மனதைத் தொடும், சிந்தனைமிக்க மற்றும் தகவல் தரும் கட்டுரை.👏🏼💐