அமெரிக்காவில் தனது கார் நம்பர் பிளேட்டாக பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி வருகிறார், அவரது தீவிர ரசிகர் ஒருவர்.
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்கின்றனர். மேலும், இப்பயணத்தின் மோடிக்கு, ஜோ பைடன் விருந்தளித்து உபசரிக்கிறார். தொடர்ந்து, இந்தோ- பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பைடனுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால்தான், உலகின் முக்கிய பிரபலங்களில் ஒருவராக மோடி வலம் வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வரும் ராகவேந்திரா என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். ஆகவே, தனது காரின் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வெளிப்படுத்தும் வகையில் ‘என் மோடி’ என்ற பெயர் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வருகிறார்.
இதுபற்றி ராகவேந்திரா கூறுகையில், “இந்த நம்பர் பிளேட்டை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வாங்கினேன். பிரதமர் மோடி எனக்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறார். நாட்டுக்காக, சமூகத்திற்காக, உலகத்திற்காக ஏதேனும் சில நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு வருகை தருகிறார். அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினருடனும் உரையாற்றுகிறார்.