அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று வர்த்தகம் துவங்கும் போதே நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 71 பைசா உயர்ந்து 80.69 ஆக இருந்தது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருட உச்ச அளவான 9.1 சதவீத உயர்வைத் தொட்டதை யாராலும் மறக்க முடியாது. அதேபோல, அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் வருடாந்திர அளவில் 7.7 சதவீத அளவில் இருந்தது. 2022-ம் ஆண்டில் இதுதான் குறைவான பணவீக்க நிலையாகும். ஆகவே, பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா நாட்டின் மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் தொடர்ந்து வட்டியை அதிகரித்து வந்தது. இதனால், அமெரிக்காவின் முதலீடுகள் பங்குச்சந்தைக்கு வரவில்லை. ஆகவே, பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை எதிர்கொண்டது. இந்த அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு, பத்திர சந்தையில் முதலீடு செய்தனர். இது, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றின் பண மதிப்பில் சரிவை ஏற்படுத்தியது. இதனால், கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது. ரெசிஷன் அச்சத்தால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் தடுமாற்றத்தை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் பணவீக்கம் சரிந்துவிட்டது. ஆகவே, பத்திர முதலீட்டுச் சந்தையில் இருந்து முதலீடுகள் திரும்பவும் பங்குச்சந்தைக்குச் சென்றிருக்கிறது. இது இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்றைய ரூபாய் மதிப்பு உயர்வுக்கும், பங்குச்சந்தை உயர்வுக்கும் ஒரே காரணம்தான். வல்லரசு நாடான அமெரிக்கா, முதலீட்டு சந்தைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக சி.பி.ஐ. என்கிற சில்லறை பணவீக்க தரவுகளை மாற்றிய காரணத்தால் டாலர் இன்டெக்ஸ் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, இந்திய சந்தையில் புதிய முதலீடுகள் குவிந்தது. இதுதான் ரூபாய் மதிப்பு வலிமைபெற காரணமாக அமைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பின் உயர்வுக்கு அமெரிக்கச் சில்லறை பணவீக்க தரவுகள் மட்டுமே காரணம் இல்லை, இந்திய நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள், நிறுவனம் மற்றும் நாட்டின் வளர்ச்சி கணிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தடுமாற்றம் ஆகியவையும் முக்கியக் காரணமாகும். உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வளர்ச்சிப் பாதையில்தான் இருக்கிறது. இதைத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் சுட்டிக்காட்டினார். ஆனால், தமிழகத்திலுள்ள சில தேசவிரோதிகள், நிர்மலா சீத்தாராமனை கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.