அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் கொலை!

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் கொலை!

Share it if you like it

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர், கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூர் மாவட்டம் ஹர்ஷி பிண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் ரந்தீர் சிங். டாக்டரான இவரது மனைவி கல்வித்துறையில் பணிபுரிந்தவர். இருவரும் ஓய்வுபெற்று விட்டனர். இவர்களது மகன்கள் ஜஸ்தீப் சிங், அமன்தீப் சிங் ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசித்து வந்தனர். இந்த சூழலில், ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை மெர்சிட் கவுண்டியில் உள்ள வணிக நிறுவனத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது, மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். வழியிலேயே அவர்களது செல்போன்களையும் கடத்தல் கும்பல் பறித்து சாலையில் வீசி விட்டது. இதனால், அவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இத்தகவல் போலீஸாருக்குத் தெரியவந்ததும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஜஸ்தீப் சிங், அமன்தீப் சிங் ஆகியோர் கைகள் கட்டப்பட்ட நிலையில், துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இதனிடையே, அமன்தீப் சிங்கின் மனைவி ஜஸ்ப்ரீத் கவுர், மாமனார் ரந்தீர் சிங்கிற்கு போன் செய்து தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் கடத்தப்பட்ட விவரத்தை தெரிவித்திருக்கிறார். அப்போது, ரந்தீர் சிங் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள ரிஷிகேஷுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார். தகவல் கிடைத்ததும் செவ்வாய்க்கிழமை இரவே ஹோஷியாப்பூர் திரும்பியவர், மறுநாள் காலையில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மகன்களுடன் வசித்து வந்த ரந்தீர் சிங், கடந்த மாதம் 29-ம் தேதிதான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தினர் 4 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இன்று காலை 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். 4 பேரும் எதற்காக கடத்தப்பட்டார்கள்? ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? என்கிற விவரம் தெரியவில்லை. இக்கடத்தல் விவகாரம் தொடர்பாக, 48 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை போலீஸார், கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவன், 2005-ம் ஆண்டு ஆயுதக்கொள்ளை வழக்கில் சிறையில் இருந்தவன் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். சமீபகாலமாகவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மீது, அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it